பாங்காக்: இந்தியாவின் செய்னா நேவல், பிரனாய் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டனர். பின், 4வது பரிசோதனையின் முடிவு ‘நெகடிவ்’ என்று வந்ததால் தாய்லாந்து ஓபனில் பங்கேற்கின்றனர்.
பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்ற இந்திய நட்சத்திரங்களான சிந்து, செய்னா நேவல், ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய், காஷ்யப், சமீர் வர்மா, சவுரப் வர்மா, சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஆகியோருக்கு ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் செய்னாவுக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த செய்னாவின் கணவரும், இந்திய வீரருமான காஷ்யப், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டல் ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து இவர்கள் இருவரும், இத்தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இதேபோல இந்திய வீரர் பிரனாய்க்கும் ‘கொரோனா’ இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து இவரது மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன. இதில் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தது. இதனால் குழப்பம் ஏற்பட, இவருக்கு மீண்டும் புதிதாக பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர், இத்தொடரில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது.
இந்நிலையில் செய்னா, பிரனாய் ஆகியோருக்கு எடுக்கப்பட்ட 4வது பரிசோதனையின் முடிவு ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது. இதனால் இவர்கள் தாய்லாந்து ஓபனில் பங்கேற்பதை இந்திய பாட்மின்டன் சங்கம் உறுதி செய்தது. இதேபோல செய்னாவின் கணவர் காஷ்யப் இத்தொடரில் பங்கேற்கிறார். இவர்கள் மூவரும் இன்று களமிறங்குகின்றனர்.
கடந்த மாதம் செய்னா, காஷ்யப், பிரனாய், குருசாய்தத், பிரனாவ் சோப்ரா ஆகியோருக்கு ‘கொரோனா’ உறுதியானது. இதிலிருந்து மீண்ட இவர்களுக்கு, பாங்காக் புறப்படுவதற்கு முன் ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தது.
இதுகுறித்து இந்திய பாட்மின்டன் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கொரோனா பரிசோதனை முடிவு ‘நெகடிவ்’ என்று வந்ததால் செய்னா, பிரனாய் ஆகியோர் தாய்லாந்து ஓபனில் பங்கேற்கின்றனர்,’’ என, தெரிவித்திருந்தது.
ஸ்ரீகாந்த் மூக்கில் ரத்தம்
தாய்லாந்து பாட்மின்டனில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்பட்டது. இந்திய வீரர் ஸ்ரீகாந்த்திற்கு 4வது முறையாக பரிசோதனை செய்த போது, அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இதற்கான புகைப்படத்தை ஸ்ரீகாந்த், தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார். இதில், ‘‘போட்டியில் பங்கேற்பதற்கு முன், 4 முறை பரிசோதனை செய்துள்ளேன். இதில் எதுவும் திருப்தி அளிப்பதாக தெரியவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது,’’ என, தெரிவித்திருந்தார்.
இவரது பதிவுக்கு உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்ட செய்தியில், ‘‘இந்திய வீரர் ஸ்ரீகாந்த், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் தான் பரிசோதனை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தாய்லாந்து பாட்மின்டன் சங்கத்தின் விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்,’’ என, தெரிவித்திருந்தது.