கிரானடா: ‘லா லிகா’ கால்பந்து லீக் போட்டியில் மெஸ்சி, கிரீஸ்மேன் கைகொடுக்க பார்சிலோனா அணி 4–0 என, கிரானடா அணியை வீழ்த்தியது.
ஸ்பெயினில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடக்கிறது. கிரானடா நகரில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, கிரானடா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பார்சிலோனா அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பார்சிலோனா அணி இந்த சீசனில் முதன்முறையாக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் ஹூஸ்கா, அத்லெடிக் கிளப் அணிகளை வீழ்த்தியது. தவிர, அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. பார்சிலோனா அணிக்கு கிரீஸ்மேன் (12, 63வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (35, 42வது நிமிடம்) தலா 2 கோல் அடித்து கைகொடுத்தனர். இதன்மூலம் மெஸ்சி, இந்த சீசனில் அதிக கோலடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 11 கோல் அடித்துள்ளார்.
பார்சிலோனா அணி, 18 போட்டியில், 10 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி என, 34 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் அத்லெடிகோ மாட்ரிட் (38 புள்ளி), ரியல் மாட்ரிட் (37) அணிகள் உள்ளன.