புதுடில்லி: இந்தியாவின் யூகி பாம்ப்ரி, மீண்டும் டென்னிஸ் பயிற்சியை துவக்கினார்.
இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி 28. கடந்த 2009ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் ஒற்றையரில் கோப்பை வென்ற இவர், ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். டேவிஸ் கோப்பையில் (2010) இந்தியாவுக்காக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய ஓபன் (2014, 3வது சுற்று), பிரெஞ்ச் ஓபன் (2018, 2வது சுற்று) கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்றுள்ளார். காமன்வெல்த் யூத் கேம்ஸ் (2008, ஒற்றையரில் வெண்கலம், இரட்டையரில் வெள்ளி), யூத் ஒலிம்பிக் (2010, ஒற்றையரில் வெள்ளி), ஆசிய விளையாட்டு (2014, ஒற்றையர், இரட்டையரில் தலா ஒரு வெண்கலம்) பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2018, அக்டோபர் மாதம் முதல், காயம் காரணமாக யூகி பாம்ப்ரி எவ்வித போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு மீண்டும் போட்டிக்கு திரும்ப முடிவு செய்த இவர், நேற்று டில்லியில் துவங்கிய அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சார்பில் நடத்தப்படும் உயர் செயல்திறன் பயிற்சி முகாமில் இணைந்தார். இந்திய பயிற்சியாளர் ஜீஷான் அலி, முன்னாள் வீரர்களான அஷுதோஷ் சிங், சவுரப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடக்கும் இம்முகாமில் இளம் வீரர்களுடன் இணைந்து டென்னிஸ், உடற்தகுதி பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இதுகுறித்து யூகி பாம்ப்ரி கூறுகையில், ‘‘கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக போட்டிகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் திறமையான இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்குவது ஏ.ஐ.டி.ஏ.,யின் சிறந்த முடிவு. இதன்மூலம் வீரர்கள் ‘பார்ம்’, உடற்தகுதியை தக்கவைத்துக் கொள்ள முடியும்,’’ என்றார்.