ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க விண்டீஸ் அணி போராடி வருகிறது.
நியூசிலாந்து சென்ற விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 519 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. விண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து, 470 ரன்கள் பின்தங்கியிருந்தது.
மிரட்டிய சவுத்தீ
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிராத்வைட் (21), கேம்பெல் (26) விரைவில் திரும்பினர். ‘மிடில் ஆர்டரில்’ புரூக்ஸ் (1), பிராவோ (9), சேஸ் (11) என ஒருவரும் நிலைக்கவில்லை. பிளாக்வுட் 23 ரன் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்றினர். விண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது. ேஹால்டர் (25) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் சவுத்தீ அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
பிளாக்வுட் நம்பிக்கை
முதல் இன்னிங்சில் 381 ரன்கள் பின்தங்கியதால் ‘பாலோ ஆன்’ பெற்ற விண்டீஸ், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இம்முறையும் பிராத்வைட் (10), கேம்பெல் (2), பிராவோ (12) என வரிசையாக திரும்ப, 89 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இணைந்த பிளாக்வுட், ஜோசப் ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாவது நாள் முடிவில் விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து, 185 ரன்கள் பின்தங்கி இருந்தது. பிளாக்வுட் (80), ஜோசப் (59) அவுட்டாகாமல் இருந்தனர்.