புதுடில்லி: ‘‘ஆஸ்திரேலிய அணிக்காக அதிகபட்ச (‘மேக்சிமம்’) விளாசலை வெளிப்படுத்தும் மேக்ஸ்வெல், ஐ.பி.எல்., என்று வந்தவுடன் குறைந்த (‘மினிமம்’) ரன்கள் எடுக்கிறார்,’’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டியில் 108 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். இதில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக முதல் 2 ஒருநாள் போட்டியில் 7 சிக்சர் உட்பட 108 ரன் எடுத்தார்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியது:
மேக்ஸ்வெல்லை பொறுத்தவரையில் ஐ.பி.எல்., கதை வேறு, ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் கதை வேறு. ஐ.பி.எல்., தொடரில் இவர் ரன்கள் சேர்க்கத் திணறுவார். ஆனால் ஆஸ்திரேலிய அணி என்று வந்து விட்டால் போதும், முடிந்த வரை அதிகபட்ச (‘மேக்சிமம்’) திறமை வெளிப்படுத்துவார்.
ஐ.பி.எல்., தொடரில் குறைந்த ரன்கள் (‘மினிமம்’) தான் எடுப்பார். கிரீசில் இவர் நிற்பதை பார்த்தால் மரம் வெட்டுபவர் போலத் தெரியும். எந்த பந்து கிடைத்தாலும் அதில் ‘சிக்சர்’ அடிக்கத் தயாராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.