சிட்னி: ‘‘பேட்ஸ்மேன்கள் ‘சுவிட்ச் ஹிட்’ முறையில் விளையாட தடை விதிக்க வேண்டும்,’’ என இயான் சாப்பல் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், மேக்ஸ்வெல், வார்னர் ‘சுவிட்ச் ஹிட்’ முறையில் அதிக ரன்கள் எடுத்தனர். பவுலர்கள் பந்து வீசும் போது, திடீரென வலமிருந்து இடமாக அல்லது இடமிருந்து வலமாக திரும்பி அடித்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சாப்பல் கூறியது:
ஸ்மித், மேக்ஸ்வெல், வார்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை எளிதாக்கினர். இவர்களது சில ‘ஷாட்டுகளை’ நம்ப முடியவில்லை (‘சுவிட்ச் ஹிட்’). ஆனால் இது நியாயமானது அல்ல. பவுலர் பந்து வீச வரும் போது, பேட்ஸ்மேன்கள் தங்களது நிலையை மாற்றி விளையாடினால் அது விதிகளுக்கு புறம்பானது என அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை நான் இப்படித் தான் செய்யப் போகிறேன் என பவுலரிடம் தெரிவித்த பிறகு விளையாடினால் சரி, மற்றபடி இது நேர்மையற்றது. ஏனெனில் எப்படி பந்து வீசப் போகிறேன் என்பதை பவுலர் முன்னதாகவே அம்பயரிடம் தெரிவிப்பார். கேப்டன் இதற்கேற்ப பீல்டிங் அமைத்திருப்பார்.
ஆனால் பேட்ஸ்மேன் யாரிடமும் தெரிவிக்காமல், அப்படியே திரும்பி விளையாடுவது எந்தவகையில் சரியாக இருக்கும். உண்மையில் இதற்கு அம்பயர்கள் புகார் தர வேண்டும். நிர்வாகிகளும் இதை சரி செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.