புடியான்: துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை பைனல்ஸ், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், ரஷ்யாவின் ஆர்டெம் செர்னோசோவ் ஜோடி தங்கம் வென்றது.
சீனாவில், துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை பைனல்ஸ் தொடர் நடந்தது. இதில் பிரசிடென்ட் டிராபிக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர், ரஷ்யாவின் ஆர்டெம் செர்னோசோவ் ஜோடி 17–13 என, இந்தியாவின் சவுரப் சவுத்தரி, கிரீசின் அனா கோரகாக்கி ஜோடியை வீழ்த்தியது.
இப்பிரிவில் இந்தியாவின் ஷாஜார் ரிஸ்வி, செர்பியாவின் சோரனா அருனோவிச் ஜோடி வெண்கலம் கைப்பற்றியது.
திவ்யான்ஷ் தங்கம்: பிரசிடென்ட் டிராபிக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார், குரோஷியாவின் ஸ்ன்ஜெசனா பெஜிக் ஜோடி 16–14 என, இந்தியாவின் அபுர்வி சண்டேலா, சீனாவின் சங்ஹாங் ஜங் ஜோடியை வீழ்த்தியது.
இத்தொடரில் 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 8 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.