Advertisement


‛இளம் புயல்’ பியான்கா சாம்பியன்: யு.எஸ்., ஓபனில் கலக்கல்

செப்டம்பர் 08, 2019 15:31
 Comments  
 


US Open Tennis, Bianca Andreescu, Canada, Champion, Serena Williams, USA, Runner Up
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், இளம் வீராங்கனை கனடாவின் பியான்கா ஆன்டிரஸ்கு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6–3, 7–5 என, அனுபவ செரினா வில்லியம்சை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–8’ அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 15வது இடத்தில் உள்ள கனடாவின் பியான்கா ஆன்டிரஸ்கு மோதினர்.

இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 37 வயதான செரினா, முதல் செட்டை 3–6 என இழந்தார். இவர், 2வது செட்டில் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5–7 என போராடி கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 40 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய 19 வயது பியான்கா 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். தவிர, கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் பட்டம் வென்ற முதல் கனடா டென்னிஸ் நட்சத்திரமானார்.

பெதானி ஜோடி கலக்கல்: கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் பிரிட்டனின் ஜெமி முர்ரே, அமெரிக்காவின் பெதானி மட்டக்–சாண்ட்ஸ் ஜோடி 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் ஹவோ–சிங் சான், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.

2004க்கு பின்...

யு.எஸ்., ஓபன் பைனலில் அசத்திய 19 வயது வீராங்கனை கனடாவின் பியான்கா, 2004க்கு பின் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்ற 3வது ‘டீன் ஏஜ்’ வீராங்கனையானார். ஏற்கனவே 2004ல் ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (19 வயது, யு.எஸ்., ஓபன்), 2006ல் ரஷ்யாவின் மரியா ஷரபோவா (19 வயது, யு.எஸ்., ஓபன்) கோப்பை வென்றிருந்தனர்.

தொடரும் சோகம்

கடந்த 2017ல் ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (23 பட்டம்), கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப்பை (22 பட்டம்) முந்தி 2வது இடம் பிடித்தார்.

அதன்பின், 4 முறை (2018ல் விம்பிள்டன், யு.எஸ்., ஓபன் மற்றும் 2019ல் விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்) கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறிய செரினா, ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இதனால், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மார்கிரேட் கோர்ட் (24 பட்டம்) உடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு செரினாவுக்கு எட்டாக் கனியாக உள்ளது.

மோனிகா வழியில்...

கடந்த 2017ல் விம்பிள்டனில் (முதல் சுற்று) களமிறங்கிய கனடாவின் பியான்கா, இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் (2வது சுற்று), பிரெஞ்ச் ஓபனில் (2வது சுற்று) பங்கேற்றார். தற்போது யு.எஸ்., ஓபனில் விளையாடிய இவர், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்தார். இது, இவரது 4வது கிராண்ட்ஸ்லாம் தொடர்.

இதன்மூலம் அமெரிக்காவின் மோனிகா செலசுக்கு பின், தான் பங்கேற்ற 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரில் கோப்பை வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.

கடந்த 1989ல் பிரெஞ்ச் ஓபனில் (அரையிறுதி) அறிமுகமான மோனிகா செலஸ், அதே ஆண்டு நடந்த விம்பிள்டன் (4வது சுற்று), யு.எஸ்., ஓபனில் (4வது சுற்று) விளையாடினார். கடந்த 1990ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்காத இவர், பிரெஞ்ச் ஓபனில் களமிறங்கி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

33 பைனல்

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இதுவரை 33 கிராண்ட்ஸ்லாம் பைனலில் விளையாடி உள்ளார். இதில் 23ல் வெற்றி பெற்று கோப்பை வென்ற இவர், 10ல் (ஆஸி., ஓபனில் 1, பிரெஞ்ச் ஓபனில் 1, விம்பிள்டனில் 4, யு.எஸ்., ஓபனில் 4) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

8வது வெற்றி

செரினாவை வீழ்த்திய பியான்கா, இந்த சீசனில் டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு எதிராக தனது 8வது வெற்றியை பதிவு செய்தார். இதனால் இன்று வெளியாகவுள்ள தரவரிசை பட்டியலில் முதன்முறையாக ‘நம்பர்–5’ இடத்துக்கு முன்னேறுகிறார்.

ரூ. 28 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற கனடாவின் பியான்கா, கோப்பையுடன், ரூ. 28.58 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்காவின் செரினாவுக்கு ரூ. 13.61 கோடி பரிசு வழங்கப்பட்டது.

மூன்றாவது பட்டம்

யு.எஸ்., ஓபனில் கனடாவின் பியான்கா கோப்பை வென்றார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் இவரது 3வது பட்டம். ஏற்கனவே இவர், இந்தியன் வெல்ஸ் ஓபன் (2019, எதிர்: ஜெர்மனியின் கெர்பர்), கனடா ஓபனில் (2019, எதிர்: அமெரிக்காவின் செரினா) கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?