கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் வடகிழக்கு யுனைடெட், டில்லி அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 5வது சீசன் நடக்கிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், டில்லி அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட டில்லி அணிக்கு 67வது நிமிடத்தில் மார்கஸ் டெபார் ஒரு கோலடித்து 1–0 என முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் இது நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் வடகிழக்கு அணியின் பார்தோலோமிவ் ஆக்பெச் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.
இதுவரை விளையாடிய 15 போட்டியில், 6 வெற்றி, 6 ‘டிரா’, 3 தோல்வி என, 24 புள்ளிகளுடன் வடகிழக்கு யுனைடெட் அணி 4வது இடத்தில் நீடிக்கிறது. டில்லி அணி 12 புள்ளிகளுடன் 8வது இடத்தில் தொடர்கிறது. முதல் மூன்று இடங்களில் முறையே பெங்களூரு (31 புள்ளி), மும்பை (27), கோவா (25) அணிகள் உள்ளன.