நாக்பூர்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இம்முறை ‘பைனல்ஸ்’ சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த தகுதிச் சுற்றில் இந்திய அணி 1–3 என, இத்தாலியிடம் வீழ்ந்தது. இதனையடுத்து ‘ஆசிய–ஓசியானா குரூப்–1’ சுற்றுக்கு தள்ளப்பட்டது.
வரும் செப்., 13–14ல் நடக்கவுள்ள ‘ஆசிய–ஓசியானா குரூப்–1’ சுற்றுக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடைசியாக இவ்விரு அணிகள் 2006ல் மும்பையில் விளையாடின. அட்டவணைப்படி இப்போட்டி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழ்நிலை காரணமாக லண்டனில் நடத்தப்படலாம். இதில் வெற்றி பெறும் அணி, ‘பைனல்ஸ்’ சுற்றுக்கான தகுதிச் சுற்றில் விளையாடும். இதற்கு முன், 1973ல் அரசியல் சூழ்நிலை காரணமாக இவ்விரு அணிகள் மலேசியாவில் மோதின.
கடைசியாக 1964ல் இந்திய அணி, லாகூரில் டேவிஸ் கோப்பையில் விளையாடியது. டேவிஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 6 போட்டியிலும் (1962, 1963, 1964, 1970, 1973, 2006) இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.