நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா அணி பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த, முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்த சவுராஷ்டிரா அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
நாக்பூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. கர்னேவர் (31), வகாரே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விதர்பா அணியின் அக்சய் கர்னேவர் அரைசதம் கடந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது அக்சய் வகாரே (34) அவுட்டானார். உமேஷ் யாதவ் (13), ராஜ்னீஷ் குர்பானி (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. கர்னேவர் (73) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சர்வாதே அசத்தல்: பின், முதல் இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஆதித்யா சர்வாதே தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ ஹார்விக் தேசாய் (10), விஷ்வராஜ் ஜடேஜா (18) சிக்கினர். தொடர்ந்து அசத்திய சர்வாதே பந்தில் அனுபவ புஜாரா (1) ஆட்டமிழந்தார். அக்சய் வகாரே ‘சுழலில்’ அர்பித் வசவதா (13), ஷெல்டன் ஜாக்சன் (9) வெளியேறினர்.
பொறுப்பாக ஆடிய ஸ்னெல் படேல் அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து, 154 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஸ்னெல் படேல் (87), பிரேராக் மன்கத் (16) அவுட்டாகாமல் இருந்தனர். விதர்பா அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 3, அக்சய் வகாரே 2 விக்கெட் வீழ்த்தினர்.