முடிவடைந்த போட்டிகள்

 
01. ஆஸி.,க்கு "ஹாட்ரிக்' உலக கோப்பை!* கில்கிறிஸ்ட் அதிவேக சதம் விளாசல் * மீண்டும் திறமை நிரூபித்து அபாரம் * பரிதாபமாக வீழ்ந்தது இலங்கை அணி
 

பார்படாஸ் : ம்ஹும்! உலக கோப்பையை யாருக்கும் தர மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்த ஆஸ்திரேலிய அணி, அதை நிறைவேற்றியும் காட்டியது. மிகவும் எதிர்பார்க் கப்பட்ட பைனலில் கில்கிறிஸ்ட் அதிவேக சதம் கைகொடுக்க, இலங்கையை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தது. கடைசி வரை போராடிய இலங்கை அணி இரண்டாம் இடத்துடன் ஆறுதல் தேடியது.

வெஸ்ட் இண்டீசில் ஒன்பதாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது.நேற்று பார்படாசில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதின. தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வென்று "ஹாட்ரிக்' சாதனை படைக்க ஆஸ்திரேலியா காத்திருந்தது. கடந்த 1996ல் கோப்பை வென்ற இலங்கை அணி இரண்டாம் முறையாக சாம்பியன் வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தது. மிக முக்கியமான இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

38 ஓவராக குறைப்பு: மழை கொட்டவே ஆட்டம் துவங்குவது சுமார் 3 மணி நேரம் தாமதமானது. இதையடுத்து 38 ஓவர்கள் கொண்டதாக போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. துவக்க வீரர் களாக வந்த கில்கிறிஸ்ட்-ஹைடன் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். வாஸ், மலிங்கா துல்லியமாக பந்துவீச முதல் 10 ஓவரில் 46 ரன்களே எடுக்க முடிந்தது. 11வது ஓவரை வீச வந்தார் பெர்னாண்டோ. இரண்டாவது பந்திலேயே கில்கிறிஸ்டை அவுட் டாக்க அருமையான வாய்ப்பு. ஆனால் கைக்கு எட்டிய "கேட்ச் சை' பெர்னாண்டோ கோட்டை விட, நிலைமை மாறியது. இந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி, ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்த கில்கிறிஸ்ட் தனது அதிரடியை துவக்கினார்.

 
 
 
 
 
 
 
கடந்த போட்டிகளில் சோபிக்காததற்கு சேர்த்து வைத்து மொத்தமாக விளாசினார். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார். இவரை அனுபவ வாஸ் முதல் "சுழல்' முரளிதரன் வரை கட்டுப்படுத்தவில்லை. போகப் போக பெர்னாண்டோ மிக அதிகமாக "அடி' வாங்கினார். சிக்சர், பவுண்டரிகள் மூலம் கில்கிறிஸ்ட் ரன்களை அள்ள, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. மறுபக்கம், இத்தொடரில் அதிக ரன் எடுத்துள்ள ஹைடன் அடக்கி வாசித்தார். முதல் விக்கெட்டுக்கு 172 ரன் சேர்த்த நிலையில் ஹைடன் 38 ரன்களுக்கு( 3 பவுண்டரி, 1 சிக்ஸ்) மலிங்கா பந்தில் வீழ்ந்தார்.
 
 
 
 
 
 
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் ஒத்துழைக்க, கில்கிறிஸ்டின் அதிரடி தொய்வின்றி தொடர்ந்தது. 72 பந்துகளில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 15வது சதம் கடந்த இவர், 149 ரன்களுக்கு(13 பவுண்டரி, 8 சிக்சர்) பெர்னாண்டோ வேகத்தில் அவுட்டானார். ஸ்கோர் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட பாண்டிங்(37), ஜெயவர்தனாவின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானார். வாட்சன் 3 ரன்களுக்கு மலிங்கா வேகத்தில் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 38 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது. சைமண்ட்ஸ்(23), கிளார்க்(8) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

ஜெயசூர்யா மிரட்டல்: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி தரங்கா(6) விக்கெட்டை விரைவாக இழந்தது. இதற்கு பிறகு ஜெய்சூர்யா, சங்ககரா இணைந்து ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை கலங்கடித்தனர். வாட்சன் வீசிய 13வது ஓவரில் ஜெயசூர்யா 3 பவுண்டரி அடித்து அசத்தினார். அடுத்த ஓவரில் அனுபவ மெக்ராத்தை ஒருகை பார்த்தார் சங்ககரா. ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடிக்க, ஆட்டம் சூடு பிடித்தது. "வேகங்கள்' கைவிட சுழலுக்கு மாறினார் கேப்டன் பாண்டிங். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. 40வது அரைசதம் கடந்த சங்ககரா 54 ரன்களுக்கு(6 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஹாக் பந்தில் வீழ்ந்தார். 64வது அரைசதம் கடந்த அதிரடி ஜெயசூர்யா 63 ரன்களுக்கு(9 பவுண்டரி) மைக்கேல் கிளார்க் சுழலில் போல்டானார். இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட் காலியாக போட்டி ஆஸ்திரேலியா பக்கம் வந்தது.

இலக்கு மாற்றம்: இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்திருந்த போது மழை குறுக் கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டி துவங்க தாமதமாக, நீண்ட நேர குழப்பத்துக்கு பிறகு இலக்கு மாற்றப்பட்ட விபரம் அறிவிக்கப்பட்டது. இலங்கை அணி 36 ஓவரில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை நின்று, ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ஜெயவர்தனா(19) அவுட் டாக நம்பிக்கை தகர்ந்தது. இதை தொடர்ந்து தில்ஷன்(14),சமரசில்வா(21) வரிசையாக வெளியேற, இலங்கை அணி 33 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்து இருந்தது.

இருட்டில் ஆட்டம்: போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட, ஆஸ்திரேலியா வீரர்கள் வெற்றி பெற்றதாக நினைத்து உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். உடனே அம்பயர் அலிம் தார் குறுக்கிட்டு இன்னும் 3 ஓவர்கள் இருப்பதாக கூற குழப்பமான சூழ்நிலை காணப்பட்டது. வானத்தில் நிலா வந்து விட, மைதானம் ஒரே இருட்டாக காட்சி அளித்தது. பின்னர் ஒளிவெள்ளத்தில் எஞ்சிய 3 ஓவர்கள் நடந்தது. இறுதியில் இலங்கை அணி 36 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலியா 53 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் மெக்ராத் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. மைக்கேல் கிளார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். இத்தொடரில் நூறு சதவீத வெற்றியுடன் கோப்பையை சூப்பராக கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி தனது திறமையை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்தது.

வில்லன் பெர்னாண்டோ! : கிரிக்கெட்டில் "கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்' என்பார்கள். கைநழுவும் போதெல்லாம் வெற்றியும் பறிபோகும். நேற்று கில்கிறிஸ்ட் வெறும் 31 ரன் எடுத்திருந்த நிலையில், கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெர்னாண்டோ வீணாக்கினார். அவரது பந்திலேயே வாய்ப்பை நழுவவிட மனதளவில் பாதிக்கப்பட்டார்.

8 ஓவரில் 74 ரன்களை அள்ளிக் கொடுத்தார். ஆல்-ரவுண்டர் மகரூப்புக்கு பதிலாக இவரை தேர்வு செய்ததது இலங்கைக்கு பெரும் வினையாக அமைந்தது.

பாவம் ஆசிய அணிகள் : உலக கோப்பை பைனலில் ஆசிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. 1999ல் பாகிஸ்தான், 2003ல் இந்தியா, 2007ல் இலங்கையை வீழ்த்தி "ஹாட்ரிக்' கோப்பை வென் றுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் கில்கிறிஸ்ட் கலக்கலாக ஆடியுள்ளார். 1999ல் 36 பந்தில் 54 ரன், 2003ல் 48 பந்தில் 57 ரன், 2007ல் 104 பந்தில் 149 ரன் விளாசியுள்ளார்.

சாதனை மழையில் "கில்லி' : நேற்று கில்கிறிஸ்டின்(செல்லமாக கில்லி) நாளாக அமைந்தது. உலக கோப்பை பைனலில் அதிக ரன்(149) எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் கேப்டன் பாண்டிங்கின்(140, எதிர் இந்தியா, 2003) சாதனையை தகர்த்தார். தவிர விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த இந்தியாவின் டிராவிட் சாதனையையும் (145 ரன், எதிர் இலங்கை, 1999)தகர்த்தார்.

* மொத்தம் 8 சிக்ஸ் அடித்த இவர், உலக கோப்பை பைனலில் அதிக சிக்ஸ்(8) அடித்த பாண்டிங் சாதனையை(எதிர் இந்தியா, 2003) சமன் செய்தார்.

* உலக கோப்பை பைனலில் அதிவேக சதம் (72 பந்துகள்) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 1975ல் நடந்த பைனலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்ட் 82 பந்துகளில் சதம்(எதிர் ஆஸி.,) அடித்து இருந்தார்.

* உலக கோப்பையில் முதல் சதம் அடித்த இவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் 15வது சதம் எட்டினார்.

* இப்போட்டியில் 111வது ரன்னை எடுத்த போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

* நேற்று ஹைடன்-கில்கிறிஸ்ட் சேர்ந்து 172 ரன் சேர்த்தனர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் துவக்க ஜோடியாக களமிறங்கி 16 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்தியாவின் சச்சின்-கங்குலி சாதனையை சமன் செய்தனர்.

* உலக கோப்பை பைனலில் ஹைடன்-கில்கிறிஸ்ட் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்(172) எடுத்த ஜோடி என்ற சாதனை படைத்தனர். இவர்கள் 1979, பைனலில் இங்கிலாந்தின் மைக் பிரியர்லி, ஜெப் பாய்காட் சாதனையை(129 ரன், எதிர் வெ.இண்டீஸ்) தகர்த்தனர்.

மெக்ராத் "250' : நேற்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் 250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார் மெக்ராத். முதல் நான்கு இடத்தில் ஸ்டீவ் வாக் (325), பாண்டிங் (280), பார்டர் (273), கில்கிறிஸ்ட் (268) உள்ளனர்.

 
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us