கிரிக்கெட்
 

ஏமாற்றத்தில் "சாதனை மன்னன்' சச்சின்

07-11-2009 IST
 

ஐதராபாத்: ""ஐதராபாத் ஒருநாள் போட்டியில் விளாசிய 175 ரன்கள் எனது சிறந்த இன்னிங்சாக அமைந்தது. ஆனாலும், இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்,'' என, சாதனை நாயகன் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இத்தொடரின் 5 வது போட்டி நேற்று முன் தினம் ஐதராபாத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டிய இந்திய அணி 49.4 ஓவரில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதையடுத்து சச்சின் விளாசிய 175 ரன்கள் பயன் இல்லாமல் போனது. 17 ஆயிரம் ரன், 45 வது சதம் என பல சாதனைகளை தான் படைத்த போதும், அணி தோல்வி அடைந்தது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""ஐதராபாத்தில் நடந்த 5 வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. சுரேஷ் ரெய்னா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். முக்கியமான கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இப்போட்டியில் எனது ஆட்டம் திருப்தி அளித்தது. எனது சிறப்பான இன்னிங்சில் இதுவும் ஒன்று. அணி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், தோல்வி அடையவே மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருவதை பெருமையாகக் கருதுகிறேன்,'' என்றார்.

இப்போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி இந்திய கேப்டன் தோனி கூறியது:
ஐதராபாத் போட்டியில், சச்சின் அபாரமாக ஆடினார். 175 ரன்கள் குவித்து தனி ஆளாக வெற்றிக்குப் போராடினார். அவர் பதிவு செய்த சதங்கள் அனைத்துமே சிறந்தவை தான். ஆனால் கடந்த 1998 ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் அவரது ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

சொதப்பிய வீரர்கள்:
"டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறிவிட்டனர். சச்சின் அவுட்டான பின், அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 17 பந்துகள், 3 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் மனவலிமை இன்றி செயல்பட்ட பின்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்து விட்டனர். 350 ரன்கள் என்பது மிகப் பெரிய இலக்கு. இருப்பினும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிகம் ஒத்துழைத்தது. இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். 325 அல்லது 330 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்டியிருந்தால், வெற்றியை எளிதாக எட்டியிருக்கலாம். பீல்டிங்கும் திருப்தி அளிக்கவில்லை. இவ்வாறு தோனி கூறினார்.

மிரட்டிய சச்சின்:
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ஆட்டத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" சச்சின் ஆட்டம் அச்சுறுத்தலாக அமைந்தது. நெருக்கடியான நேரத்தில் அவரது ரன் குவிப்பு பாராட்டுக்குரியது. ஷான் மார்ஷ், ஷேன் வாட்சன் சிறப்பாக செயல்பட்டு அசத்தினர். அறிமுக பந்து வீச்சாளர் மெக்கே திறமையை நிரூபித்தார்,'' என்றார்.

---------------
இவர்களுக்கு அதிர்ஷ்டமில்லை
இதை படித்தால் சச்சின் ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடையலாம். தனிநபராக ஒரு வீரர் போராடி 175 ரன்களுக்கு மேல் எடுத்தும், அந்த அணிகள் தோல்வி அடைந்த வரலாறு உண்டு. இந்த வரிசையில் ஐதராபாத்தில் 175 ரன்கள் எடுத்த சச்சின் மூன்றாவது வீரராகிறார்.
* இதற்கு முன் 2009, ஆக. 16ம் தேதி புலவாயோவில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி 194* ரன்கள் விளாசி, ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தானின் சயீத் அன்வர்(194, எதிர், இந்தியா, 1997) சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் ஜிம்பாப்வே 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 47.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்து வெற்றி பெற, கவன்ட்ரி ஆட்டம் வீணானது.
* கடந்த 2007, பிப்., 20ம் தேதி ஹாமில்டனில் நடந்த போட்டியில் ஹைடன் 181* ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து "திரில்' வெற்றி பெற்றது. இதையடுத்து ஹைடன் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.
--------------

எட்ட முடியாத சாதனை
ஒருநாள் அரங்கில் சச்சின் எடுத்துள்ள 17, 168 ரன்களை இனிமேல் யாராலும் எட்டுவது கடினம். <<இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள இலங்கையின் ஜெயசூர்யா (13,377) ஒப்பிடுகையில் 3 ஆயிரத்து 791 ரன்கள் முன்னிலையில் உள்ளார். அதிக ரன்கள் எடுத்த "டாப்-5' வீரர்கள்
வீரர் போட்டிகள் ரன்கள்
சச்சின் (இந்தியா) 435 17,168
ஜெயசூர்யா (இலங்கை) 441 13,377
பாண்டிங் (ஆஸி.,) 329 12,286
இன்சமாம் (பாக்.,) 378 11,739
கங்குலி (இந்தியா) 311 11,363
----------

அதிக சதங்களின் முதல்வன்
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் இதுவரை 45 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து பாண்டிங் (28), ஜெயசூர்யா (28) உள்ளனர்.
அதிக சதம் கடந்தவர்களில் "டாப்-5'
வீரர் சதம்
1.சச்சின் (இந்தியா) 45
2.பாண்டிங் (ஆஸி.,) 28
3.ஜெயசூர்யா (இலங்கை) 28
4.கங்குலி (இந்தியா) 22
------

இரண்டாவது இடம்
அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர்கள் வரிசையில் இரண்டாமிடத்தை இந்தியாவின் சச்சின் (435) பெற்றுள்ளார். முதலிடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (441) உள்ளார். அடுத்த 3 இடங்களில் பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), இந்தியாவின் டிராவிட் (339) உள்ளனர்.
------

விருதில் "டாப்'
ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது(60) வென்றவர்கள் வரிசையிலும் முதல் இடத்தில் சச்சின் தான் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் இலங்கையின் ஜெயசூர்யா (48), வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் (31) உள்ளனர்.
-----------

சாதனை வீரர்

ஐதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
* ஏழு ரன்கள் எடுத்த போது ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.
* ஒரு நாள் போட்டிகளில் 45 வது சதம் அடித்து, அதிக சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையில் நீடிக்கிறார்.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதம் (9) பதிவு செய்த வீரர் சச்சின் தான். தவிர, அதிக ரன் குவித்தவரும் (2995 ரன்) இவரே.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார் சச்சின் (175 ரன்). இதன் மூலம் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (175 ரன், 2006) சாதனையை சமன் செய்தார்.
* ஒரு நாள் அரங்கில் 150 ரன்களுக்கு மேல் 4 முறை எடுத்து அசத்தியுள்ள சச்சின், இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை சமன் செய்தார்.
சச்சின், நியூசிலாந்துக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை (186 ரன், 1999) பதிவு செய்தார். தவிர, ஆஸ்திரேலியா (175 ரன், 2009), நியூசிலாந்து (163 ரன், 2009), நமீபியா (152 ரன், 2003) ஆகிய அணிகளுக்கு எதிராக 150 ரன்களை கடந்துள்ளார்.
----------

கிரிக்கெட் "கிங்'
கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்த சச்சினுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கங்குலி (முன்னாள் இந்திய வீரர்): கிரிக்கெட் அரங்கின் "கிங்' சச்சின். தொடர்ந்து 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல. 17 ஆயிரம் ரன்களை எட்டுவதும் அரிதல்ல. ஆனால் சச்சின் இச்சாதனை படைத்துள்ளார். நேற்று முன் தினம் நடந்த போட்டியில், அவரது ஆட்டம் சிறப்பானதாக அமைந்தது. அடுத்த உலககோப்பைக்குள் (2011) இன்னும் 2000 ரன்கள் அவர் குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கவாஸ்கர் (முன்னாள் இந்திய வீரர்): சாதனை வீரர் சச்சினுக்கு எனது பாராட்டுக்கள். ஐதராபாத் ஒரு நாள் போட்டியில் அவரது ஆட்டம், பழைய சச்சினை நினைவு படுத்தியது. நெருக்கடியான இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கிரிக்கெட்டின் மீது அவருக்கு உள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. தனது சாதனைப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
மியாண்டட் (முன்னாள் பாக்., வீரர்): கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல் இன்று வரை, ரன் தாகம் குறையாமல் விளையாடி வருகிறார் சச்சின். இன்றைய இளம் வீரர்கள் அவரை "ரோல் மாடலாக' தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவரது உயர்வுக்கு கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம். எல்லாவற்றுக்கும் மேலாக தனது சிறப்பான நடவடிக்கைகளால், விளையாட்டின் சிறந்த தூதராக திகழ்கிறார்.

கிப்ஸ் (தென் ஆப்ரிக்கா வீரர்): தொடர்ந்து 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் அசத்தி வரும் சச்சினுக்கு எனது வாழ்த்துக்கள். அவருக்குள்ளான திறமை தான் அவரை சாதனையாளராக உருவாக்கி உள்ளது.
வாசிம் ஜாபர் (இந்திய வீரர்): சச்சின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர்ஒரு நாள் அரங்கில் 20 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு இது எளிது தான்.

ரோகித் சர்மா (இந்திய வீரர்): சச்சின் சாதனை மிகப் பெரியது. அவரால் இந்திய கிரிக்கெட் பெருமை அடைகிறது.

 
 
 
Print this page நகல் எடுக்க     |     எழுத்தின் அளவு: Decrease font Decrease font    |      |    
    முதல் பக்கம் விளையாட்டு முதல் பக்கம் கிரிக்கெட் முதல் பக்கம்    
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us