கிரிக்கெட்
 

ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்: தோனி

04-11-2009 IST
 

மொகாலி: "முன்னணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் தான், மொகாலி போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்,'' என தோனி தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மொகாலியில் நடந்த 4 வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
மொகாலி ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக அமைந்தது. 250 ரன்கள் என்பது எட்டக் கூடிய இலக்கு தான். இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்து விட்டனர். 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாதது துரதிருஷ்டவசமானது. நல்ல துவக்கம் கிடைத்தும், மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்து விட்டன.
சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. 6 அல்லது 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி பேட் செய்வது மிகவும் கடினம். சூழ்நிலையை புரிந்து கொண்டு மிகவும் சாதுர்யமாக விளையாட வேண்டும். இவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். பேட்டிங் செய்ய போதிய வாய்ப்பு அளிக்கும் நோக்கில் தான் விராத் கோஹ்லியை 3வது வீரராக களமிறக்கினோம்.
பீல்டிங் சூப்பர்:
இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் திருப்தி அளித்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மொகாலி போட்டியில் அணியின் பீல்டிங் பாராட்டும்படியாக அமைந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இஷாந்த் சர்மா பந்து வீச்சை குறிவைத்து தாக்கினர். இதனால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட இஷாந்த், சோபிக்க தவறினார். அடுத்த போட்டியில் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தோனி தெரிவித்தார்.
பவுலிங் தந்த வெற்றி:
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு சிறப்பான பந்து வீச்சே காரணம் என்றார் பாண்டிங். இது குறித்து அவர் கூறுகையில்,"" 250 ரன்கள் என்பது சுமாரான இலக்கு தான். கடைசி 10 ஓவர்களில் ரன் குவிக்க தவறி விட்டோம். இருப்பினும் பவுலிங் மற்றும் பீல்டிங் வெற்றிக்கு கைகொடுத்தது,'' என்றார்.
சமநிலை:
நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 வது போட்டி நாளை ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

நாடு திரும்புகிறார் சிடில்
ஆஸ்திரேலியா அணியில் பிரட் லீ, ஹோப்ஸ், டிம் பெய்ன் ஆகியோர் காயத்தினால் தொடரின் பாதியில் நாடு திரும்பி விட்டனர். இந்நிலையில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் காயத்துக்கு உள்ளாகி உள்ளார். நேற்று முன் தினம் நடந்த 4 வது ஒரு நாள் போட்டியில், 5 ஓவர்கள் மட்டும் வீசிய இவர் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டார். இதனை அடுத்து அவர் உடனடியாக நாடு திரும்புகிறார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் முன்னணி வீரர்களான மைக்கேல் கிளார்க், நாதன் பிராக்கன், பிராட் ஹாடின் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அபராதம்
மொகாலியில் நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில், தாமதமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார் போட்டி நடுவர் கிறிஸ் பிராட்.

 
 
 
Print this page நகல் எடுக்க     |     எழுத்தின் அளவு: Decrease font Decrease font    |      |    
    முதல் பக்கம் விளையாட்டு முதல் பக்கம் கிரிக்கெட் முதல் பக்கம்    
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us