கிரிக்கெட்
 

இந்தியா பரிதாப தோல்வி

03-11-2009 IST
 

மொகாலி: முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக இந்திய அணி தோல்வி அடைந்தது. பேட்டிங், பவுலிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது ஆஸ்திரேலியா.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 கணக்கில் முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி நேற்று மொகாலியில் நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியில் காம்பிர் நீக்கப்பட்டு விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.

பாண்டிங் அரை சதம்: ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், மார்ஷ் துவக்கம் தந்தனர். 23 பந்துகளை சந்தித்த மார்ஷ் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டானார். 6 பவுண்டரிகளை விளாசிய வாட்சன் (49) அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். பின்னர் பாண்டிங், ஒயிட் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய பாண்டிங் ஒரு நாள் அரங்கில் 73 வது அரை சதம் கடந்தார். இவர் 52 (5 பவுண்டரி ஒரு சிக்சர்) ரன்கள் எடுத்த போது, ரவிந்திர ஜடேஜாவின் துல்லியமான "த்ரோவால்' ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஒயிட் "50': மறுமுனையில் ஒரு நாள் அரங்கில் 4 வது அரை சதம் எட்டினார் ஒயிட். இவருடன் இணைந்த மைக் ஹசி 40 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு உதவினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஒயிட் (62), நெஹ்ராவால் "ரன் அவுட்' ஆனார்.
ஜான்சன் சொதப்பல்: பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் (6), ஜான்சன் (8) சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். "டெயிலெண்டர்களான' கிரஹாம் (7), சிடில் (1), போலிங்கர் (0) சோபிக்க தவற, 49.2 ஓவரில் ஆல்-அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 250 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் நெஹ்ரா 3, ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடி துவக்கம்: சற்று கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த இவர், ஜான்சன் பந்து வீச்சை குறிவைத்து தாக்கினார். 7 பவுண்டரிகளை விளாசிய சேவக், 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார் சச்சின். கோஹ்லி (10) சோபிக்க வில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 40 (6 பவுண்டரி) ரன்களுக்கு அவுட்டானார்.

தோனி "அவுட்': பின்னர் யுவராஜ் சிங்குடன் தோனி இணைந்தார். 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யுவராஜ் "ரன் அவுட்' செய்யப்பட்டார். கேப்டன் தோனியும் (26) நீண்ட நேரம் நிலைக்க வில்லை. சற்று நேரம் தாக்குப் பிடித்து ஆடிய ரெய்னாவும் (17) அவுட்டாக, முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது இந்திய அணி.

ஹர்பஜன் ஆறுதல்: அடுத்து வந்த ஹர்பஜன், அதிரடியாக ஆடினார். 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 31 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இவருடன் இணைந்து ஓரளவு ரன் சேர்த்தார் பிரவீண் (16). நெஹ்ரா (7) சொதப்பினார். 46.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 226 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் வாட்சன் கைப்பற்றினார்.

இவ்வெற்றியின் மூலம் தொடர் 2-2 கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 வது ஒரு நாள் போட்டி வரும் 5 ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

தவறான தீர்ப்பு: நேற்றைய போட்டியில் 47 ரன்கள் அடித்து ஒரு நாள் அரங்கில் 17 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனை படைக்க காத்திருந்தார் சச்சின். ஆனால் இவரது சாதனைக் கனவை தகர்த்தார் இலங்கை அம்பயர் அசோகா டி சில்வா. ஹாரிட்ஸ் வீசிய பந்தில் தவறான எல்.பி.டபிள்யு., கொடுத்து சச்சினை (40) வெளியேற்றினார். இதனால் 7 ரன்களில் வாய்ப்பை நழுவ விட்டார் சச்சின்.

"நோ' பவுண்டரி: மொகாலி போட்டியில், ஆஸ்திரேலியா அணி ரன் சேர்க்க திணறியது. ஆட்டத்தின் 44 வது ஓவரில் பேட்டிங் "பவர் பிளே' ஓவரை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 5 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையில், 27 ரன்கள் சேர்த்தது. தவிர, 4 விக்கெட்டுகளை இழந்தது.

4 "ரன் அவுட்': நேற்றைய போட்டியில் இந்திய அணி பீல்டிங்கில் அசத்தியது. ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை பெருமளவு கட்டுப்படுத்திய இந்திய வீரர்களின் துல்லியமான பீல்டிங்கில் பாண்டிங், ஒயிட், கிரஹாம், போலிங்கர் ஆகிய நான்கு வீரர்கள் "ரன்-அவுட்' செய்யப்பட்டு வெளியேறினர்.

நிரம்பிய மைதானம்: சீக்கிய குரு, குருநானக்கின் பிறந்த நாளை ஒட்டி, விடுமுறை நாளான நேற்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம் நிரம்பி வழிந்தது. சுமார் 35 ஆயிரம் பேர் நேற்றைய போட்டியை கண்டு களித்தனர். பயிற்சிக்காக பஞ்சாப் வந்துள்ள சீன பெண்கள் கிரிக்கெட் அணியினரும் ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா

வாட்சன் (கே) தோனி (ப) ஹர்பஜன் 49 (52)
மார்ஷ் எல்.பி.டபிள்யு., (ப) நெஹ்ரா 5 (23)
பாண்டிங் -ரன் அவுட் (ஜடேஜா)- 52 (59)
ஒயிட் --ரன் அவுட் (நெஹ்ரா)- 62 (71)
ஹசி (கே) இஷாந்த் (ப) யுவராஜ் 40 (41)
ஹென்ரிக்ஸ் (ஸ்டெ) தோனி (ப) ஹர்பஜன் 6 (13)
ஜான்சன் (ப) நெஹ்ரா 8 (15)
கிரஹாம் -ரன் அவுட்(பிரவீண்) 7 (6)
ஹாரிட்ஸ் -அவுட் இல்லை- 9 (11)
சிடில் (கே) ஜடேஜா (ப) நெஹ்ரா 1 (5)
போலிங்கர் -ரன் அவுட்(பிரவீண்) 0 (1)
உதிரிகள் 11
மொத்தம் (49.2 ஓவரில் ஆல்-அவுட்) 250

விக்கெட் வீழ்ச்சி: 1-24 (மார்ஷ்), 2-88 (வாட்சன்), 3-123 (பாண்டிங்), 4-196 (ஹசி), 5-217 (ஹென்ரிக்ஸ்), 6-226 (ஒயிட்), 7-236 (ஜான்சன்), 8-241 (கிரஹாம்), 9-247 (சிடில்), 10-250 (போலிங்கர்).

பந்து வீச்சு: பிரவீண் 9.2-0-41-0, நெஹ்ரா 8-0-37-3, இஷாந்த் 5-0-42-0, ஜடேஜா 7-0-27-0, ஹர்பஜன் 10-0-48-2, யுவராஜ் 10-0-54-1.

இந்தியா

சேவக் (கே) வாட்சன் (ப) போலிங்கர் 30 (19)
சச்சின் எல்.பி.டபிள்யு., (ப) ஹாரிட்ஸ் 40 (68)
கோஹ்லி (கே) கிரஹாம் (ப) போலிங்கர் 10 (16)
யுவராஜ் -ரன் அவுட்(பாண்டிங்) 12 (21)
தோனி (கே) கிரஹாம் (ப) போலிங்கர் 26 (46)
ரெய்னா (ப) ஹாரிட்ஸ் 17 (30)
ஜடேஜா --ரன் அவுட்(பாண்டிங்)- 7 (21)
ஹர்பஜன் (கே) அண்ட் (ப) வாட்சன் 31 (25)
பிரவீண் (கே) கிரஹாம் (ப) வாட்சன் 16 (19)
நெஹ்ரா (கே) ஹாரிட்ஸ் (ப) வாட்சன் 7 (8)
இஷாந்த் -அவுட் இல்லை- 3 (8)
உதிரிகள் 27
மொத்தம் (46.4 ஓவரில் ஆல்-அவுட்) 226

விக்கெட் வீழ்ச்சி: 1-40 (சேவக்), 2-78 (கோஹ்லி), 3-94 (சச்சின்), 4-113 (யுவராஜ்), 5-145 (தோனி), 6-156 (ரெய்னா). 7-177 (ஜடேஜா), 8-204 (ஹர்பஜன்), 9-217 (பிரவீண்), 10-226 (நெஹ்ரா).

பந்து வீச்சு: ஜான்சன் 9-0-74-0, சிடில் 5-2-15-0, போலிங்கர் 9-2-38-3, ஹென்ரிக்ஸ் 7-0-33-0, ஹாரிட்ஸ் 9-1-31-2, வாட்சன் 7.4-1-29-3.

 
 
 
Print this page நகல் எடுக்க     |     எழுத்தின் அளவு: Decrease font Decrease font    |      |    
    முதல் பக்கம் விளையாட்டு முதல் பக்கம் கிரிக்கெட் முதல் பக்கம்    
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us