Advertisement


கோப்பை வென்றது இந்தியா: ஐதராபாத் டெஸ்டில் வெற்றி

அக்டோபர் 14, 2018.
 Comments [1]  
 


India, West Indies, Hyderabad Test Cricket
 

ஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் அசத்திய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ‘வேகத்தில்’ மிரட்டிய உமேஷ் யாதவ், 10 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ‘சரண்டர்’ ஆனது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே (75), ரிஷாப் பன்ட் (85) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரிஷாப் நம்பிக்கை: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஹோல்டர் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ரகானே (80), ரவிந்திர ஜடேஜா (0) வெளியேறினர். ஷனான் கேபிரியல் பந்தில் ரிஷாப் பன்ட் (92) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து அசத்திய கேபிரியல், அஷ்வினை (35) போல்டாக்கினார். 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 367 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.  வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5, கேபிரியல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

உமேஷ் அசத்தல்: பின், 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. இவரது முதல் ஓவரின் 2வது பந்தில் கிரெய்க் பிராத்வைட் (0) அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் பாவெல் (0) அஷ்வினிடம் சரணடைந்தார். அடுத்து வந்த ஹோப் (28), ஹெட்மயர் (17) நிலைக்கவில்லை.

உமேஷ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) போல்டாகினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அம்ரிஸ் (38), ஜடேஜா ‘சுழலில்’ சிக்கினார். கேப்டன் ஹோல்டர் (19), ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 127 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, ஜடேஜா 3, அஷ்வின் 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப வெற்றி: இரண்டாவது இன்னிங்சில் 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பிஷூ பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பிரித்வி ஷா வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் தலா 33 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

 

மூன்று நாள்

ஐதராபாத் டெஸ்ட் 3 நாளில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி, கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளும் (எதிர்: ஆப்கன், இடம்: பெங்களூரு மற்றும் எதிர்: வெ.இ., இடம்: ராஜ்கோட், ஐதராபாத்) மூன்று நாளில் முடிந்தன.

இதற்கு முன், கடந்த 2013–2015ல் சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளும் (எதிர்: ஆஸி., இடம்: டில்லி, எதிர்: வெ.இ., இடம்: கோல்கட்டா, மும்பை மற்றும் எதிர்: தெ.ஆ., இடம்: மொகாலி) 3 நாளில் முடிவடைந்தன.

யார் ‘டாப்’

அதிக ரன் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரித்வி ஷா முதலிடம் பிடித்தார். இவர், 2 டெஸ்டில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 237 ரன்கள் குவித்தார். அடுத்த 4 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் சேஸ் (185 ரன்), இந்தியாவின் கோஹ்லி (184), ரிஷாப் பன்ட் (184), ரகானே (121) உள்ளனர்.

விக்கெட் வேட்டை

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 2 டெஸ்டில், 11 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த 4 இடங்களில் இந்தியாவின் குல்தீப் யாதவ் (10 விக்.,), அஷ்வின் (9), ஜடேஜா (7), வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் (5) உள்ளனர்.

10 டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கோப்பை வென்றதன்மூலம், கடந்த 2013 முதல் சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது. இதில் ஆஸ்திரேலியா (2012–13, 2016–17), வெஸ்ட் இண்டீஸ் (2013–14, 2018–19) அணிகளுக்கு எதிராக தலா 2 முறை தொடரை வென்ற இந்தியா, தென் ஆப்ரிக்கா (2015–16), நியூசிலாந்து (2016–17), இங்கிலாந்து (2016–17), வங்கதேசம் (2016–17), இலங்கை (2017–18), ஆப்கானிஸ்தான் (2018) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. ஆஸ்திரேலிய அணி, இரண்டு முறை (1994–95 முதல் 2000–01 வரை மற்றும் 2004 முதல் 2008–09 வரை) சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தலா 10 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது.

8வது முறை

வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 8வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே பாகிஸ்தான் (1952ல் மும்பை, 1980ல் சென்னை), நியூசிலாந்து (1988ல் ஐதராபாத், 2009ல் ஹாமில்டன்) தலா 2, இங்கிலாந்து (2001ல் மொகாலி), ஜிம்பாப்வே (2005ல் ஹராரே), வங்கதேசம் (2010ல் தாகா) தலா ஒரு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

21 டெஸ்ட்

கடந்த 2002ல் நடந்த மும்பை டெஸ்ட் முதல், தற்போது முடிந்த ஐதராபாத் டெஸ்ட் வரை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடிய 21 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததில்லை. இந்த 21 டெஸ்டில் இந்தியா 12ல் வெற்றி பெற்றது. ஒன்பது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தன.

இதன்மூலம் எந்த ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக டெஸ்டில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி 8வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து அணி (47 டெஸ்ட், எதிர்: நியூசிலாந்து, 1930–75) உள்ளது.

அடுத்து ஒருநாள் தொடர்

டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி வரும் 21ல் கவுகாத்தியில் (அசாம்) நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் விசாகப்பட்டனம் (அக். 24), புனே (அக். 27), மும்பை (அக். 29), திருவனந்தபுரம் (நவ. 1) நகரங்களில் நடக்கவுள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 8 hours ago | Report abuse
எதிர்பார்த்ததுதான் வாழ்த்துக்கள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?