Advertisement


சபாஷ் உமேஷ், ரிஷாப், ஷா: இந்திய அணி ஆதிக்கம்

அக்டோபர் 13, 2018.
 Comments  
 


india vs west indies, hyderabad test, umesh yadav
 

ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. ரிஷாப் பன்ட், பிரித்வி ஷா அரைசதம் விளாசினர். பவுலிலிங்கில் உமேஷ் யாதவ் ஆறு விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. 

சேஸ் சதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ், கடைசி பந்தில் பிஷூவை (2)  போல்டாக்கினார். குல்தீப் பந்தில் ஒரு ரன் எடுத்த ரோஸ்டன் சேஸ், டெஸ்ட் அரங்கில் நான்காவது சதம் அடித்தார். இது இந்தியாவுக்கு எதிராக அடித்த இரண்டாவது சதம். 

சபாஷ் உமேஷ்

மீண்டும் மிரட்டிய உமேஷ் யாதவ், இம்முறை சேஸ் (106) விக்கெட்டை தகர்த்தார். அடுத்த பந்தில் கேபிரியலும் ‘டக்’ அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. உமேஷ் யாதவ் 6 விக்கெட் சாய்த்தார். 

ராகுல் ஏமாற்றம்

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. கேபிரியல் வீசிய முதல் ஓவரின் 4 வது பந்தில் பவுண்டரி அடித்த பிரித்வி, அடுத்து பந்தை சிக்சருக்கு அனுப்ப முதல் ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து வேகமாக ரன்கள் குவித்த பிரித்வி, வாரிகன் சுழலில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். ராகுல் (4) போல்டானார். கடந்த 9 இன்னிங்சில் இவர் 5வது முறையாக போல்டானார்.

பிரித்வி அரைசதம்

மறுபக்கம் 45 ரன் எடுத்த போது ஹோப் தயவில் தப்பிய பிரித்வி, 39வது பந்தில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குப் பின் கூடுதல் வேகம் காட்டிய பிரித்வி, 70 ரன்னுக்கு அவுட்டானார். புஜாரா (10) ஏமாற்றினார். 

அடுத்து கேப்டன் கோஹ்லி, ரகானே இணைந்தனர். ரகானே ‘ஆமை’ வேகத்தில் ரன்கள் சேர்த்தார், நிதான ரன்குவிப்பை வெளிப்படுத்திய கோஹ்லி 45 ரன்னுக்கு வெளியேறினார். 

ரிஷாப் அசத்தல்

ரகானேயுடன் சேர்ந்த ரிஷாப் பன்ட் பொறுப்பாக ரன்கள் சேர்த்தார். ரகானே 15வது டெஸ்ட் அரைசதம் எட்டினார். 24 ரன்னில் ‘கேட்ச்’ வாய்ப்பில் இருந்து தப்பிய ரிஷாப் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். தொடர்ந்து வாரிகன் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர் அடித்தார் ரிஷாப். 

இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் (85), ரகானே (75) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது 3 ரன்கள் மட்டும் பின்தங்கியுள்ள இந்திய அணி, இன்றும் ரன்குவிப்பை தொடர்ந்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம். 

நுாற்றாண்டின் சிறந்த ‘வேகம்’

சொந்த மண்ணில் 6 விக்கெட் சாய்த்த இந்த நுாற்றாண்டின் (2000க்குப் பின்) முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் உமேஷ். இதற்கு முன் 1999ல் ஸ்ரீநாத், நியூசிலாந்துக்கு எதிராக 6 விக்கெட் சாய்த்து இருந்தார். 

* நேற்று 88 ரன்களுக்கு 6 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன் 2012, பெர்த் டெஸ்டில் (ஆஸி.,) 93 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

* தவிர சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்த 6வது வேகப்பந்து வீச்சாளர் ஆனார். இதற்கு முன் கமாண்துர் ரங்காசாரி (107/5, 1948), கார்சன் காவ்ரி (51/5, 1978), கபில்தேவ் (77/6, 83/9, 1983), சேட்டன் சர்மா (55/5, 1987), முகமது ஷமி (47/5, 2013) இதுபோல சாதித்தனர்.

* கடந்த ஐந்து ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் முகமது ஷமி (2013, எதிர்–வெ.இண்டீஸ்), புவனேஷ்வருக்குப் (48/5, 2016, எதிர்–நியூசி.,) பின் 5 விக்கெட் சாய்த்த மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனர் உமேஷ். 

* ஐதராபாத் மைதானத்தில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார் உமேஷ். இதற்கு முன் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின் 3 (2012, 2முறை, நியூசி., மற்றும் 2013, ஆஸி.,), 2010ல் வெட்டோரி 1 என (எதிர்–இந்தியா) இதுபோல அசத்தினர்.

‘நம்பர்–1’ கேப்டன்

நேற்று 45 ரன்கள் எடுத்த கோஹ்லி, டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த ‘நம்பர்–1’ ஆசிய கேப்டன் ஆனார். இவர் 42 போட்டியில் 4,233 ரன்கள் (சராசரி 65.96) எடுத்துள்ளார். அடுத்த இடங்களில் மிஸ்பா (4,214 ரன், பாக்., 51.39), ஜெயவர்தனா (3,665, இலங்கை, 59.11), இந்தியாவின் தோனி (3,454, 40.63), கவாஸ்கர் (3,449, 50.72) உள்ளனர்.

*  சர்வதேச அளவில் அதிக ரன் எடுத்த டெஸ்ட் கேப்டன்களில் கோஹ்லி 7வது இடத்தில் உள்ளார். 

* சிறந்த ரன் சராசரி கொண்ட சர்வதேச டெஸ்ட் கேப்டன்களில் நான்காவதாக (65.97 ரன்) உள்ளார். முதல் மூன்று இடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (101.52), ஸ்டீவ் ஸ்மித் (70.37), இலங்கையின் சங்ககரா (69.61) உள்ளனர். 

கபில்தேவுக்கு அடுத்து...

டெஸ்ட் அரங்கில் வேகமாக அரைசதம் எட்டிய இரண்டாவது ‘டீன் ஏஜ்’ இந்திய வீரர் ஆனார் பிரித்வி (39 பந்து). இதற்கு முன் 1978ல் கபில்தேவ் (எதிர்–பாக்., கராச்சி) 33 பந்தில் அரைசதம் அடித்தார். 

மாற்று விக்கெட் கீப்பர் சரியா

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேபிரியல் வீசிய பந்து, விக்கெட் கீப்பர் டவ்ரிச் இடது முழங்காலில் பட்டுச் சென்றது. இதனால் வலி ஏற்பட உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இவருக்குப் பதில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற ஷாய் ஹோப், கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்று வீரர் (‘சப்ஸ்டிடியூட்’) ஹாமில்டன் களமிறங்கினார். இது சரியா என கேள்வி எழுந்தது.

ஏனெனில் மாற்று வீரராக இருப்பவர் பீல்டிங் மட்டும் தான் செய்ய வேண்டும். பவுலிங், பேட்டிங் செய்ய அனுமதி கிடையாது. இதேபோல விக்கெட் கீப்பிங்கும் செய்யக் கூடாது. ஆனால் காயம் காரணமாக வெளியேற நேரிடும் போது இதற்கு அனுமதி உண்டாம்.

கடந்த 2018 ஐ.பி.எல்., தொடரில் மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் காயம் அடைந்த போது மாற்று வீரரான ஆதித்ய தாரே, கீப்பிங் செய்துள்ளார். 

2

டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து மூன்று இன்னிங்சில் 50 ரன்னுக்கும் மேல் (114, 92, 85*) எடுத்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷாப் பன்ட். இதற்கு முன் தோனி 2008ல் 56, 55, 53 ரன், 2009ல் 52, 56, 110 என இரு முறை இதுபோல ரன்கள் எடுத்துள்ளார்.

8

டெஸ்ட் அரங்கில் முதல் இரண்டு டெஸ்டில் 50 மற்றும் அதற்கும் மேல் ரன்கள் எடுத்த 8வது இந்திய வீரர் ஆனார் பிரித்வி (134, 70 ரன்). தில்வர் ஹொசைன் (59, 57), கிர்பால் சிங் (100, 63), கவாஸ்கர் (65, 67), கங்குலி (131, 136), டிராவிட் (95, 84), ரெய்னா (120, 62), ரோகித் (177, 111)இதுபோல சாதித்தனர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?