Advertisement


சதம் விளாசினார் முஷ்பிகுர் * வங்கதேச அணி இமாலய வெற்றி

செப்டம்பர் 15, 2018.
 Comments  
 


Mushfiqur Rahim, bangladesh, century
 

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. பேட்டிங்கில் அசத்திய முஷ்பிகுர் சதம் விளாசினார்.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் நேற்று இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, பேட்டிங் தேர்வு செய்தார்.

சபாஷ் மலிங்கா

கடந்த ஒரு ஆண்டாக இலங்கை அணிக்காக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நேற்று மீண்டும் களமிறங்கினார். வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஜோடி துவக்கம் தர, மறுபக்கம் மின்னல் வேகத்தில் பவுலிங் செய்தார் மலிங்கா. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் லிட்டன் தாஸ் ‘டக்’ அவுட்டானார். பின் வந்த ‘சீனியர்’ சாகிப் அல் ஹசனை (0), ஒரே பந்தில் (6வது) போல்டாக்கினார் மலிங்கா.

வங்கதேச அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அனுபவ வீரர் தமிம் இக்பால் (2) இடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேற சிக்கல் அதிகரித்தது. இந்நிலையில் மிதுன் (1), முஷ்பிகுர் (10) இருவரும் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்புகளை இலங்கை வீரர்கள் கோட்டை விட்டனர். வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அரைசதம் அடிக்க, வங்க தேச அணி (134 ரன்/2 விக்.,) மீண்டது.

மீண்டும் சறுக்கல்

மறுபடியும் மிரட்ட வந்த மலிங்கா, இம்முறை மிதுனை (63) அவுட்டாக்கினார். மகமதுல்லா (1) அபோன்சோவிடம் சரிந்தார். மொசாதெக் (1) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மெகிதி 15, மொர்டசா 11, ரூபல் 2 ரன்களுக்கு அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்த போதும் மனம் தளராமல் போராடினார் முஷ்பிகுர். லக்மல் பந்தில் பவுண்டரி அடித்த இவர், ஒருநாள் அரங்கில் 6வது சதம் எட்டினார். இவர் 144 ரன்னுக்கு அவுட்டானார். வங்கதேச அணி 49.3 ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

விக்கெட் மடமட...

இலங்கை அணிக்கு தரங்கா, மெண்டிஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. மொர்டசா பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் தரங்கா. தொடர்ந்து முஷ்தபிஜுர் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசி இலங்கை அணி முதல் 10 பந்தில் 21 ரன்கள் எடுத்தது.

பின், மெண்டிஸ் தான் சந்தித்த முதல் பந்தில் ‘டக்’ ஆகி சரிவை துவக்கி வைத்தார். அடுத்து தரங்கா (27) அவுட்டாக, டி சில்வாவும் (0) வந்த வேகத்தில் வெளியேறினார். இதன் பின் இலங்கை அணி சரிவில் இருந்து மீளவே இல்லை. 

பெரேரா 11, ஷானகா 7 என அவுட்டாக, கேப்டன் மாத்யூஸ் 16 ரன்னுக்கு திரும்பினார். திசரா (6) கைவிட்டார். இலங்கை அணி 69 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. சற்று தாக்குப்பிடித்த லக்மலை (20), முஸ்தபிஜுர் போல்டாக்கினார். 

தில்ரூவன் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். கடைசியாக அபோன்சா (4) அவுட்டாக இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

 

124

ஆசிய கோப்பை லீக் போட்டியில் நேற்று இலங்கை அணி 124 ரன்னுக்கு சுருண்டது. இது, ஒருநாள் அரங்கில் வங்கதேச அணிக்கு எதிராக, இலங்கை அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் 2009ல் தாகா போட்டியில் 147 ரன்கள் எடுத்திருந்தது.

 

32

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று வங்கதேசத்தின் முஷ்பிகுர், துவக்க வீரர் தமிம் இக்பால் ஜோடி 10வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தது. ஒருநாள் அரங்கில் துவக்க வீரர் ஒருவர் 10 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுப்பது இது தான் முதன் முறை.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்டின், மெக்ராத் இணைந்து, நியூசிலாந்துக்கு எதிராக 31 ரன்கள் (2000) எடுத்தனர்.

 

144

வங்கதேசத்தின் முஷ்பிகுர் நேற்று 144 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தை பாகிஸ்தானின் யூனிஸ் கானுடன் (144, எதிர்–இலங்கை, 2004) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் இந்தியாவின் கோஹ்லி (183, எதிர்–பாக்., 2012) உள்ளார்.

 

கும்ளே வழியில் தமிம்

நேற்று 2 ரன் எடுத்த போது லக்மல் பந்தை எதிர்கொண்ட வங்கதேச துவக்க வீரர் தமிம் இக்பால், இடதுகைமணிக்கட்டு பகுதியில் காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு ‘ஸ்கேன்’ செய்யப்பட்டது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, கையில் கட்டுடன் வந்தார்.

அணியின் நலன் கருதி கடைசிவீரராக களமிறங்கிய இவர்,வலது கையால் பேட் செய்துதுணிச்சலை காட்டினார். பின் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார்.இது, இந்தியாவின் கும்ளேவை நினைவுபடுத்தியது. கடந்த 2002 ஆன்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீசின் தில்லான் வீசிய பந்து தாக்கியதில் கும்ளேயின்  முகத்தாடை எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது. சிகிச்சைக்குப் பின் மீண்டும் 20 நிமிடங்கள் பேட்டிங் செய்தார்.

பிறகு முகத்தில் கட்டுப் போட்டு வந்த இவர், தொடர்ந்து 14 ஓவர்கள் வீசினார். லாராவையும் அவுட்டாக்கினார்.

Advertisement

இந்தியா vs ஹாங்காங் , போட்டி 4
Asia Cup, 2018
9/18/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?