Advertisement


‘தங்க மங்கை’ சுவப்னா : ‘ஹெப்டத்லான்’ போட்டியில் கலக்கல்

ஆகஸ்ட் 29, 2018.
 Comments [1]  
 


Swapna Barman
 

ஜகார்த்தா: ஆசிய ‘ஹெப்டத்லான்’ போட்டியில் தங்கம் வென்று கலக்கினார் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. பெண்களுக்கான ‘ஹெப்டத்லான்’ போட்டி நடந்தது. இதில் 7 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெறுபவர் தங்கம் தட்டிச் செல்வார். இந்தியா சார்பில் சுவப்னா பர்மன், 21, பூர்ணிமா, 25, பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடந்த இதில் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதலில் சுவப்னா முதலிடம் பிடித்தார். குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் இரண்டாவது இடம் பெற்றார். 100 மீ., ஓட்டத்தில் ஐந்தாவது இடம், 200 மீ., ஓட்டத்தில் 7வது இடம் பிடித்தார். முதல் ஆறு போட்டிகள் முடிவில் சுவப்னா 5218 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஏழாவது மற்றும் கடைசியாக நேற்று 800 மீ., ஓட்டம் நடந்தது. இதில் 2 நிமிடம், 21.13 வினாடி நேரத்தில் வந்து 808 புள்ளிகள் பெற்றார்.

ஏழு போட்டிகள் முடிவில் சுவப்னா, 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். குயின்லிங் (சீனா, 5954), யமாசகி (ஜப்பான், 5873) அடுத்த இரு இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை பூர்ணிமா (5837) நான்காவது இடம் பெற்றார்.

நிறைவேறிய கனவு

மேற்கு வங்கத்தின் ஹோஸ்பராவை சேர்ந்தவர் சுவப்னா. 2014 முதல் இப்போட்டியில் பங்கேற்கிறார். இன்சான் ஆசிய விளையாட்டில் (5வது இடம்) காயத்தால் அவதிப்பட்டார். இம்முறை தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்று சாதித்துள்ளார்.

முதல் நட்சத்திரம்

‘ஹெப்டத்லான்’ போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற வரலாறு படைத்தார் சுவப்னா. இதற்கு முன் சோமா பிஸ்வாஸ், வெள்ளி (2002), ஜே.ஜே.ஷோபா, வெண்கலம் (2006), பிரமிளா, வெண்கலம் (2010) வென்றுள்ளனர். 

காயம் தொல்லை

சுவப்னா வலது பக்க பல் வலி காரணமாக வலியால் அவதிப்பட்டார். இருப்பினும் கடந்த இரு நாட்களாக ‘பேண்டேஜ்’ ஒட்டிக்கொண்டு போட்டியில் பங்கேற்று சாதித்தார் சுவப்னா.

5

நேற்று அர்பிந்தர் சிங், சுவப்னா சாதிக்க, ஜகார்த்தா ஆசிய தடகளத்தில் இந்தியா ஐந்து தங்கம் வென்றது. இதற்கு முன் தஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மன்ஜித் சிங் (800 மீ.,) தங்கம் வென்றனர். 

ஆறு விரல் அதிசயம்

சுவப்னா பிறக்கும் போதே இரு கால்களிலும் ஆறு விரல்களுடன் பிறந்தார். இதனால் தனது கால்களுக்கு பொருத்தமான ‘ஷூ’ கிடைக்காமல் அவதிப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘ பொருத்தமான ‘ஷூ’ இல்லாமல் போட்டியில் அதிக வலியுடன் தான் பங்கேற்பேன். பல்வேறு வகைகளை மாற்றிப் பார்த்த போதும் எனது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே இல்லை,’’ என்றார்.

ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா

ஆசிய ஸ்குவாஷ் அணிகளுக்கான போட்டிகள் தற்போது நடக்கின்றன.  ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, முதல் மூன்று போட்டிகளில் ஈரான் (3–0), தாய்லாந்து (3–0), இந்தோனேஷியாவை (3–0) என வென்றது. நேற்று நடந்த நான்காவது போட்டியில் சீனாவை 3–0 என சாய்த்து அரையிறுதியை உறுதி செய்தது.

இன்று ஹாங்காங்கை வெல்லும் பட்சத்தில் அரையிறுதியில் ஜப்பான் அல்லது மலேசியாவை சந்திக்கலாம்.

* இந்திய ஆண்கள் அணி ‘பி’ பிரிவில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் சிங்கப்பூர் (3–0), இந்தோனேஷியா (3–0), கத்தாரை (2–1) வீழ்த்தியது.

ஹேண்ட்பால்: ஆறுதல் வெற்றி

ஆசிய ஆண்கள் ஹேண்ட்பால் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இடங்களுக்கான போட்டியில் 3வது பிரிவில் இடம் பெற்ற இந்தியா நேற்று, இந்தோனேஷியாவை சந்தித்தது. இதன் முதல் பீரியடில் 16–13 என முன்னிலையில் இருந்த இந்தியா, முடிவில் 37–23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பைனலில் மன்ஜித் சிங்

ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டம் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் மன்ஜித் சிங், 3 நிமிடம், 50.58 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் 3 நிமிடம், 46.50 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார்.

* ஆண்களுக்கான 4*100 மீ., ‘ரிலே’ ஓட்டத்தின் தகுதி நேற்று நடந்தது. இதில் இந்தியா சார்பில் களமிறங்கிய முகமது, ஜித்து, ஜீவன், தருண் அய்யாச்சாமி அடங்கிய அணி, ஒட்டு மொத்தமாக நான்காவது இடம் (3 நிமிடம், 06.48 வினாடி) பிடித்து பைனலுக்கு முன்னேறியது. 

சறுக்கிய சாப்ட் டென்னிஸ்

ஆசிய சாப்ட் டென்னிஸ் ‘சி’ பிரிவு கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் ரோகித் திமன், ஆதயா ஜோடி, சீன தைபேவின் கெய்வென், செங் ஜோடியிடம் 0–5 என தோற்றது. அடுத்த போட்டியில் லாவோசின் சிட்டகோன், போன்சமய் ஜோடியிடம் 3–5 என சரிந்தது.

* ‘எப்’ பிரிவில் இந்தியாவின் அனிகீட் சிராக், நமிதா ஜோடியை எதிர்த்து விளையாட இருந்த மங்கோலிய ஜோடி விலகிக் கொண்டதால் 5–0 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஜப்பானின் டோஷிகி, ரிகோ ஜோடியிடம் 0–5 என தோற்றது.

குராஷ்: காலிறுதியில் தோல்வி

குராஷ் (மல்யுத்தம் போன்ற தற்காப்பு கலை) போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 63 கி.கி., ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் மேஹா,10–0 என துர்க்மெனிஸ்தானின் குல்ஷாத்தை வென்றார். பிறகு நடந்த காலிறுதியில் இந்தோனேஷியாவின் ஷிபாவிடம் 0–3 என தோற்க, குறைந்தபட்சம் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இந்தியாவின் பினிஷா, மணிஷ், குணால் ‘ரவுண்டு–32’ போட்டிகளில் தோற்றனர்.

வாலிபால்: இந்திய பெண்கள் வெற்றி

ஆசிய பெண்கள் வாலிபால் போட்டியில் இந்தியா பதக்க வாய்ப்பை நழுவவிட்டது. 9 முதல் 12 வரையிலான இடங்களைப் பெறுவதற்கான போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது. இதில் 25–18, 25–16, 25–13 என எளிதாக வென்றது.

சைக்கிளிங்: ஆல்பன் ஏமாற்றம்

ஆசிய சைக்கிளிங் போட்டியில் நேற்று இந்திய இளம் வீரர் எசவ் ஆல்பன் பங்கேற்றார். சமீபத்திய ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெ ள்ளி கைப்பற்றிய இவர், இம்முறை ‘ரவுண்டு–16’ சுற்றில் 0.443 வினாடி பின் தங்கி தோல்வியடைந்தார்.

நழுவிய ‘நடை’ வெண்கலம்

ஆசிய பெண்கள் 20 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் குஷ்பிகுர் கவுர், 1 மணி நேரம், 35.24 நிமிடத்தில் வந்து நான்காவது இடம் பிடித்து வெண்கல வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சவுமியா பேபி, தகுத நீக்கம் செய்யப்பட்டார்.

* ஆண்கள் 20 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் இர்பான், மணிஷ் சிங் ராவத் இருவரும் 12 கி.மீ., துாரத்திற்குப் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

25

கலப்பு ‘ரிலே’ 4*400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ் அடங்கிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய தடகள வரலாற்றில் ‘ரிலே’ ஓட்டத்தில் இந்தியா வென்ற 25வது பதக்கமாக இது அமைந்தது. ஜப்பான் (45), சீனா (32) முதல் இரு இடத்தில் உள்ளன.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , போட்டி 5
Asia Cup, 2018
9/19/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
vaazhththukkal ....,




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?