Advertisement


‘சிங்கிளா’ அடிச்ச சிங்கம் * சதம் அடித்து அசத்திய கோஹ்லி

ஆகஸ்ட் 02, 2018.
 Comments  
 


India, England, First Test, Virat Kohli, Cricket
 

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க தனது ஆயிரமாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் ஓவரை அஷ்வின் வீச, ஆண்டர்சன் 2 ரன் எடுத்தார். அடுத்த ஓவரை ஷமி வீசினார். 4வது பந்தில் குர்ரான் (24) அடித்த பந்தை இம்முறை சரியாக ‘கேட்ச்’ செய்தார் தினேஷ் கார்த்திக். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4, ஷமி 3 விக்கெட் சாய்த்தனர்.

துவக்கம் நம்பிக்கை: இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி துவக்கம் கொடுத்தது. பிராட் பந்துகளில் இருவரும் பவுண்டரிகள் அடித்தனர். இவர்களது சீரான ஆட்டம் கைகொடுக்க விக்கெட் இழப்பின்றி ஸ்கோர் 50 ரன்களை எட்டியது.

திடீர் சரிவு: தனது 3வது ஓவரை வீசிய குர்ரான் இந்திய அணிக்கு இரட்டை அடி கொடுத்தார். 4வது பந்தில் ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் முரளி விஜய் (20) வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் (4), 5வது பந்தில் பவுண்டரி அடித்து கடைசி பந்தில் போல்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் வந்த குர்ரானிடம் தவான் (26) வீணாக சிக்கினார்.

ரகானே வீண்: பின் கோஹ்லி, ரகானே இணைந்தனர். திடீரென ஏற்பட்ட சரிவில் இருந்து அணியை மீட்க இருவரும் போராடினர். கடந்த 2014 தொடரில் ஆண்டர்சன் ‘வேகத்தில்’ 4 முறை ‘சிலிப்’ பகுதியில் அவுட்டான கோஹ்லி, இம்முறை அவரை சற்று கவனமாக எதிர்கொண்டார்.

இருப்பினும் ஆண்டர்சன் ஓவர்களில் கோஹ்லி அடித்த பந்துகள், மூன்று முறை ‘சிலிப்’ வீரர்கள் அருகில் சென்று விழ, ‘கேட்ச்’ வாய்ப்பில் தப்பினார். ஒருவழியாக இந்திய அணியின் ஸ்கோர் 100ஐ எட்டிய போது ரகானே (15) அவுட்டானார். தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் ‘டக்’ அவுட்டாகி, கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.

ஆண்டர்சன் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில், மாலன் தயவில் கோஹ்லி (21) கண்டம் தப்பினார். அடுத்து  பாண்ட்யா (0) கொடுத்த ‘கேட்ச்சை’ குக் கோட்டை விட, இந்திய ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இது அதிக நேரம் நீடிக்கவில்லை. பாண்ட்யா (22) ஏமாற்றினார்.

‘சூப்பர்’ சதம்: பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, நிதானமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் அஷ்வின் (10), ஷமி (2) விரைவில் அவுட்டாகினர். இஷாந்த் 5 ரன் எடுத்தார். ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, இங்கிலாந்து மண்ணில் முதல் சதம் விளாசினார். அடில் ரஷித் ‘சுழலில்’ கோஹ்லி (149) சிக்கினார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. உமேஷ் யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் குர்ரான் 4, ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

குக் ஏமாற்றம்: பின் 13 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் அலெஸ்டர் குக் (0), அஷ்வின் ‘சுழலில்’ போல்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து, 22 ரன் முன்னிலை வகித்திருந்தது. ஜென்னிங்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

எங்கும் தமிழ்

இங்கிலாந்து டெஸ்டில் விக்கெட் கீப்பராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் உள்ளார். முதல் இன்னிங்சில் ஜோ ரூட், ஜென்னிங்ஸ் பேட்டிங் செய்த போது அஷ்வின் பந்தை சுழற்றினார். இருவரும் தமிழர் என்பதால் கார்த்திக் தமிழில் பேசி கலக்கினார்.

‘ நல்லாயிருக்கு அஷ்வின் நல்லாயிருக்கு, போடு மாமா... போடு மாமா... அடுத்த மூணையும் அப்படியே போடு, என்ன பண்ணுரான்னு பார்க்கலாம் மாமா,’ என அஷ்வினிடம் கூறினார். 

மற்றொரு முறை,‘ ரொம்ப கிட்ட வேணாம், இவனுக்கெல்லாம் சாதாரணமாக போடு, ஒன்னு போனா பரவாயில்லை,’ என்றார்.

மூன்றாவது முறை

ஆசிய மண்ணுக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய், தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு நேற்று மூன்றாவது முறையாக 50 அல்லது அதற்கும் மேல் ரன்கள் சேர்த்தது. இதற்கு முன் 2014 தொடரில் மெல்போர்ன் (55), பிரிஸ்பேன் (56) டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு அரைசதம் அடித்தனர்.

100வது விக்கெட்

தினேஷ் கார்த்திக்கை போல்டாக்கிய இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் (4163 ரன்), டெஸ்ட் அரங்கில் 100வது விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தவிர 2500 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் என்ற இலக்கை குறைந்த டெஸ்டில் (42) எட்டிய 3வது ‘ஆல் ரவுண்டர்’ ஆனார். 

முதல் இரு இடத்தில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (37), தென் ஆப்ரிக்காவின் காட்டார்டு, டோனி கிரெய்க் (40) முதல் இரு இடத்தில் உள்ளனர். 

அம்பயர் குழப்பம்

இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் (24வது ஓவர்) வீசிய பந்து ரகானே கால் பேடில் பட்டது. அம்பயர் அலீம் தர் (பாக்.,) அவுட் தர மறுத்தார். ஜோ ரூட்டும் அப்பீல் செய்யவில்லை. ‘ரீப்ளேயில்’ பந்து ‘ஸ்டம்சை’ தகர்த்தது தெரியவர, இங்கிலாந்து வீரர்கள் சோகம் அடைந்தனர். 

* அடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் பாண்ட்யாவுக்கு எல்.பி.டபிள்யு., ‘அவுட்’ கொடுத்தார் அலீம் தர். ‘ரீப்ளேயில்’ பந்து வெளியே செல்வது தெரியவர பாண்ட்யா தப்பினார். 

61 ரன், 7 விக்.,

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 216/3 என வலுவான நிலையில் இருந்தது. திடீரென சரிவு ஏற்பட, அடுத்து 61 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழக்க, 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சபாஷ் கேப்டன்

கடந்த 2014 தொடரில் ஐந்து டெஸ்டில் 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20 என மொத்தம் 134 ரன்கள் தான் எடுத்தார். இதன் சராசரி 13.50 ரன். இதனால் இத்தொடரில் கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதற்கேற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதம் (149 ரன்) அடித்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார். 

அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மனைவி அனுஷ்கா நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து முத்தமிட்டு மகிழ்ந்தார். 

* இங்கிலாந்தில் இதற்கு முன் 2014, சவுத்தாம்டன் டெஸ்டில் கோஹ்லி 39 ரன் (119 பந்து) எடுத்ததே அதிகம்.

தவிர, இம்முறை தான் அதிக பந்துகளை (225) எதிர்கொண்டார்.

ஆயிரத்தில் ஒருவன்

கேப்டன் கோஹ்லி, தனது 23வது ரன்னை எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த 13வது இந்திய வீரர் ஆனார். இந்த அணிக்கு எதிராக 14 டெஸ்டில் கோஹ்லி மொத்தம் 1126 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (2,535 ரன்) உள்ளார்.

பிராட்மேனுக்கு அடுத்து...

டெஸ்ட் அரங்கில் அரைசதம் அடித்த பிறகு, அதை சதமாக மாற்றியதில் அதிக சராசரி கொண்ட வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்தார் கோஹ்லி (57.89 சதவீதம்). முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (69.04%) உள்ளார்.

இரண்டாவது இடம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்களில் அசாருக்கு (179 ரன், 1990) அடுத்த இடத்தை பெற்றார் கோஹ்லி (149). பட்டோடி (148, 1967), கங்குலி (128, 2002) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

ஒன்பதாவது முறை

டெஸ்ட் அரங்கில் வார்னரை (ஆஸி.,) தொடர்ந்து, இங்கிலாந்தின் குக்கும், அஷ்வினிடம் அதிக முறையாக (9) அவுட்டாகினார். 

22 சதம்

டெஸ்ட் அரங்கில் கோஹ்லி நேற்று 22 சதம் அடித்தார். குறைந்த இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் கோஹ்லி நான்காவது (113) இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் பிராட்மேன் (58. ஆஸி.,), கவாஸ்கர் (101, இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (108, ஆஸி.,) உள்ளனர். 

* தவிர கேப்டனாக டெஸ்ட் அரங்கில் 15 வது சதம் அடித்தார் கோஹ்லி. இந்த வரிசையில் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ஸ்டீவ் ஸ்மித்துடன் (ஆஸி.,) 3வது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் கிரீம் ஸ்மித் (தெ.ஆப்., 25), பாண்டிங் (ஆஸி., 19) உள்ளனர். 

149 ரன்

கடந்த 2014 தொடரில் 5 டெஸ்டில் மொத்தம் 288 பந்துகளை சந்தித்து 134 ரன்கள் மட்டும் எடுத்தார் கோஹ்லி. இம்முறை முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் மட்டும் 225 பந்துகளை எதிர்கொண்டு 149 ரன்கள் விளாசினார் கோஹ்லி.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?