Advertisement


ரோகித் சர்மா ‘சரவெடி’ சதம்: கோப்பை வென்றது இந்தியா

ஜூலை 08, 2018.
 Comments [2]  
 


rohit
 

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் ரோகித் சர்மா சதமடித்து கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. நேற்று, மூன்றாவது போட்டி பிரிஸ்டல் நகரில் நடந்தது.

சகார் அறிமுகம்

இந்திய அணியில் குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சகார் (அறிமுகம்), சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தீபக் சகார் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் பட்லர். மறுமுனையில் அசத்திய ராய், ஹர்திக் பாண்ட்யா வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்டார். யுவேந்திர சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராய், 23 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்திருந்த போது சித்தார்த் கவுல் ‘வேகத்தில்’ பட்லர் (34) போல்டானார். அபாரமாக ஆடிய ராய் 31 பந்தில் 67 ரன் (7 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார்.

பாண்ட்யா மிரட்டல்

பின் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பாண்ட்யா தொல்லை தந்தார். இவர் வீசிய 14வது ஓவரில் கேப்டன் இயான் மார்கன் (6), ஹேல்ஸ் (30) அவுட்டாகினர். பின், 18வது ஓவரில் ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) வெளியேறினர். லியாம் பிளங்கட் (9), கிறிஸ் ஜோர்டான் (3) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட் கைப்பற்றினார்.

ரோகித் விளாசல்

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (5) ஏமாற்றினார். வில்லே வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய ரோகித் சர்மா, ஜாக் பால் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். பின், ஜோர்டான் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் ரோகித். பிளங்கட், ஜாக் பால் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த லோகேஷ் ராகுல் (19) நிலைக்கவில்லை. ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித், 28 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், பிளங்கட் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.

அடில் ரஷித், பிளங்கட் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் கோஹ்லி (43) ஜோர்டான் பந்தில் அவுட்டானார்.  ஜாக் பால் பந்தில் 2 பவுண்டரி அடித்த பாண்ட்யா, வில்லே வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஜோர்டான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித் சதமடித்தார். இந்திய அணி 18.4 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (100), பாண்ட்யா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனி ‘இரட்டை’ சாதனை

இந்தியாவின் தோனி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 50 ‘கேட்ச்’ செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். இதுவரை இவர், 93 போட்டியில், 54 ‘கேட்ச்’ செய்துள்ளார். இவரை அடுத்து வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (34), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (30) அதிக ‘கேட்ச்’ செய்துள்ளனர்.

* இங்கிலாந்துக்கு எதிராக ‘பீல்டிங்கில்’ அசத்திய தோனி, 5 ‘கேட்ச்’ செய்தார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ‘கேட்ச்’ செய்த விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), மட் பிரையர் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), வெஸ்லி பரேசி (நெதர்லாந்து), தோனி (இந்தியா) ஆகியோர் தலா 4 ‘கேட்ச்’ செய்திருந்தனர். இதில் கில்கிறிஸ்ட், தோனி தலா 2 முறை 4 ‘கேட்ச்’ செய்திருந்தார்

முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய இந்தியாவின் ரோகித் சர்மா (100*), தனது 3வது ‘டுவென்டி–20’ சதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இவர், தென் ஆப்ரிக்கா (106 ரன், 2015, இடம்: தர்மசாலா), இலங்கை (118 ரன், 2017, இடம்: இந்துார்) அணிகளுக்கு எதிராக சதமடித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் கோலின் முன்ரோவுடன் (3 சதம்) பகிர்ந்து கொண்டார்.

2000

இந்தியாவின் ரோகித் சர்மா, தனது 14வது ரன்னை கடந்த போது சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 2000 ரன்களை எட்டிய 5வது சர்வதேச வீரர் மற்றும் 2வது இந்திய வீரரானார். இதுவரை இவர், 84 போட்டியில் 2086 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்தின் கப்டில் (2271 ரன்), பிரண்டன் மெக்கலம் (2140), பாகிஸ்தானின் சோயிப் மாலிக் (2121), இந்தியாவின் கோஹ்லி (2102) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

23

இந்தியாவுக்கு எதிராக 23 பந்தில் அரைசதம் கடந்த ஜேசன் ராய், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிவேக அரைசதமடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை ரவி போபராவுடன் (23 பந்து, எதிர்: ஆஸ்திரேலியா, 2014, இடம்: ஹோபர்ட்) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ஜாஸ் பட்லர் (22 பந்து, எதிர்: ஆஸ்திரேலியா, 2018, இடம்: பர்மிங்காம்) உள்ளார்.

பாண்ட்யா ‘4’

‘வேகத்தில்’ அசத்திய இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, 4 ஓவரில், 38 ரன் வழங்கி, 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2016ல் தாகாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3.3 ஓவரில், 8 ரன் வழங்கி, 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

198

மூன்றாவது போட்டியில் 198 ரன் எடுத்த இங்கிலாந்து அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது 2வது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தது. ஏற்கனவே கடந்த 2007ல் டர்பனில் நடந்த போட்டியில் 200 ரன் குவித்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
S.Rajagopalan Srinivasan one week ago | Report abuse
இந்த ரோஹித் பய்யன் பிட்சுக்கு வரும்போது முழிச்சிகினு கீரனா , தூங்கறானான்னு சந்தேகம் இருக்கும். ஒரே டென்சனா இருக்கும். மொதோ ரெண்டு மூணு பந்தை சொதப்பினா நமக்கு கிலியாகிவிடும். சீக்கிரம் அவுட்டாயிருவான் . யில்லேன்னு வைய்யி ...நைசா , சூப்பரா ஆடி..அப்பாலே சாத்து சாத்துன்னு சாத்துடுவான். இவன் கும்பகர்ணன். அவனா எந்திரிச்சு வந்தான்னா கொளுத்திருவான். எழுப்பி வந்தான்னா அவ்ளோதான்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan one week ago | Report abuse
எதிர்பார்த்த ஒன்றுதானே.,..




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?