Advertisement


அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி: குரோஷியாவிடம் வீழ்ந்து பரிதாபம்

ஜூன் 22, 2018.
 Comments  
 


Croatia advance on a dark night for Argentina, world cup football
 

நிஸ்னி நோவ்கிராடு: உலக கோப்பை லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி குரோஷியாவிடம் வீழ்ந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளது. 

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்–5’ அணியான அர்ஜென்டினா, 20வது இடத்தில் உள்ள குரோஷியாவை சந்தித்தது. முதல் போட்டியை ‘டிரா’ (ஐஸ்லாந்து) செய்தததால், வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது அர்ஜென்டினா.

தவிர குரோஷிய அணிக்கு எதிரான 4 உலக கோப்பை போட்டியிலும் தோற்றது இல்லை என்பதால் நம்பிக்கையுடன் களமிறங்கினர். முதல் பாதியில் குரோஷிய வீரர்கள் கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது போல, தங்களது ஏரியாவுக்குள் மட்டும் இருந்தனர். மெஸ்சிக்கு மட்டும் 2 வீரர்கள் என தனியாக வைத்து பின் தொடரச் செய்தனர். இதனால் மெஸ்சி, அகுயரோ இருவருக்கும் அதிகமாக பந்து செல்லவே இல்லை. முதல் பாதி 0–0 என முடிந்தது. 

பெரிய தவறு: இரண்டாவது பாதி துவங்கிய 8வது நிமிடம் அர்ஜென்டினா கோல் கீப்பர் வில்லி காபெல்லரோவிடம் பந்து சென்றது. இதை வலது பக்கம் இருந்த சக வீரர் மெர்காடோவிடம் கொடுக்க முயற்சித்தார். இதை சரியாக உதைக்காமல் போக, பந்து முன்னால் இருந்த ரெபிச்சிடம் (53வது) சென்றது. இதை அப்படியே வில்லி தலைக்கு மேலாக அடித்து கோல் அடிக்க, அனைவரும் அதிர்ந்தனர். 

இன்னும் 47 நிமிடம் உள்ளது, மெஸ்சி எப்படியும் காப்பாற்றுவார் என நம்பிய ரசிகர்களுக்கு, மாட்ரிச் இடியாக இறங்கினார். 80வது நிமிடம் 16 மீ., துாரத்தில் இருந்து மாட்ரிச் அடித்த பந்து கோலாக மாற, 0–2 என அர்ஜென்டினா பின் தங்கியது. 

போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1வது) மெசாவிடம் இருந்து பந்தை பெற்றார் விடா. இது ‘ஆப் சைடு’ என அர்ஜென்டினா வீரர்கள் ஒருபக்கம் முறையிட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் பந்தை பெற்ற ராகிடிச் எளிதாக கோல் அடித்தார். 

அர்ஜென்டினா தரப்பில் யாரும் கோல் அடிக்காமல் போக 0–3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இரு வெற்றி பெற்ற குரோஷியா அணி (6 புள்ளி) 1998க்குப் பின் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியானது. 

60 ஆண்டுகளுக்கு பின்... 

கடந்த 1958 உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, லீக் சுற்றில் 1–6 என செக்கோஸ்லோவாகியாவிடம் வீழ்ந்தது. தற்போது 60 ஆண்டுக்குப் பின் லீக் போட்டியில் 3 கோல்கள் விட்டுக் கொடுத்து மோசமாக தோற்றது.

2002க்குப் பின்

கடந்த 2002 உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி 0–1 என இங்கிலாந்திடம் தோற்றது. இதன் பின் பங்கேற்ற 11 லீக் போட்டிகளில் 8 வெற்றி, 3 ‘டிரா’ செய்தது. முதன் முறையாக குரோஷியாவிடம் தோற்றது.

வாய்ப்பு எப்படி

‘டி’ பிரிவில் அர்ஜென்டினா அணி (1 புள்ளி) அடுத்த சுற்றுக்கு முன்னேற 33 சதவீதம் தான் வாய்ப்புள்ளது. ஏற்கனவே குரோஷியா (6) தகுதி பெற்று விட்டது.

* இதனால் ஐஸ்லாந்து (1) அணி, நைஜீரியாவை (0) வென்று, அடுத்து குரோஷியாவிடம் தோற்க வேண்டும். அர்ஜென்டினா தனது கடைசி போட்டியில் நைஜீரியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

* ஒருவேளை ஐஸ்லாந்து–நைஜீரியா போட்டி ‘டிரா’ ஆனால், அடுத்து அர்ஜென்டினா, நைஜீரியாவை சாய்க்க வேண்டும். மற்றொரு போட்டியில் ஐஸ்லாந்து, குரோஷியாவிடம் ‘டிரா’ அல்லது தோற்க வேண்டும்.

* மாறாக நைஜீரியா, ஐஸ்லாந்தை வீழ்த்தினால், அர்ஜென்டினா கடைசி போட்டியில் நைஜீரியாவை அதிக கோல் அடித்து வெல்ல வேண்டும். தவிர, குரோஷியாவுக்கு எதிராக ஐஸ்லாந்து வென்றால் கோல் அடிப்படையில் முன்னேறலாம். 

பயிற்சியாளர் காரணமா

அர்ஜென்டினா தோல்விக்கு பயிற்சியாளர் ஜார்ஜ் சாம்பாவோலியின் மோசமான திட்டமிடல் தான் காரணம் என கூறப்படுகிறது. உலகில் அதிக சம்பளம் பெறும் பயிற்சியாளர்களில் ஒருவரான சாம்பாவோலிக்கு (ரூ. 157 கோடி) எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர். 

குரோஷிய அணி முதல் கோல் அடித்த போது, அகுயரோவை பார்த்து சாம்பாவோலி ஏதோ திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமான அவர்,‘ என்ன வேண்டும் என அவரே சொல்லட்டும்,’ என கூறிக்கொண்டே நிற்காமல் சென்று விட்டார். 

நைஜீரிய அணிக்கு எதிராக (ஜூன் 26) களமிறங்கும் முன் வீரர்கள்–பயிற்சியாளர்கள் இடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும் 1986ல் கோல் அடித்து கோப்பை வெல்ல கைகொடுத்த முன்னாள் வீரர் ஜார்ஜ் பருச்சகா பொறுப்பேற்பது குறித்து பேசி வருவதாகத் தெரிகிறது. 

‘வில்லன்’ ஆன வில்லா

அர்ஜென்டினா கோல் கீப்பர் வில்லா காபெல்லரோ. இவரது தவறு காரணமாக குரோஷியா முதல் கோல் அடிக்க, அர்ஜென்டினா வீரர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் வில்லன் ஆனார். இத்தொடரில் முகமது அல் ஓவைஸ் (சவுதி அரேபியா), சிசெஸ்னி (போலந்து), டேவிட் டி கியா (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் இதுபோல தவறு காரணமாக எதிரணி வீரர்களை எளிதாக கோல் அடிக்க விட்டனர்.

வென்றது எப்படி

குரோஷிய அணி கேப்டன் லுகா மாட்ரிச் கூறுகையில்,‘‘ மெஸ்சி சிறந்த வீரர் தான். ஆனால் தனிப்பட்ட முறையில் களத்தில் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் கால்பந்து போட்டிகளில் சக வீரர்களின் ஒத்துழைப்பு அவசியம். எங்களைப் பொறுத்தவரை மெஸ்சியிடம் பந்து செல்லாமல் பார்த்துக் கொள்வது, அவரை தனிமைப்படுத்துவது என திட்டமிட்டு செயல்பட்டோம், வெற்றி கிடைத்தது,’’ என்றார்.

தகர்ந்த நம்பிக்கை

அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சாம்பாவோலி கூறுகையில்,‘‘ குரோஷிய அணி கோல் ஏரியாவில் அதிக நெருக்கடி தர திட்டமிட்டு விளையாடினோம். மாறாக அவர்கள் ஒரு கோல் அடித்ததும் எங்கள் நம்பிக்கை தகர்ந்து விட்டது. தோல்விக்கு முழுப்பொறுப்பேற்கிறேன்,’’ என்றார்.

மாரடோனா சோகம்

அர்ஜென்டினா அணிக்காக அதிக உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர் ‘ஜாம்பவான்’ மாரடோனா (21). 1986ல் கோப்பை வென்று தந்தார். ரஷ்யா தொடரில் அர்ஜென்டினா போட்டிகளை நேரில் பார்த்து உற்சாகம் தருகிறார். குரோஷியா அணிக்கு எதிரான போட்டியின் போது 0–1 என பின்தங்க ஏமாற்றம் அடைந்தார். கடைசி நேரத்தில் 0–3 என நிலைமை மோசமாக, சோகத்தில் இருக்கையில் சாய்ந்து முகத்தில் கைவத்து அழும் நிலைக்கு சென்றது பரிதாபமாக இருந்தது.

மவுன அஞ்சலி

குரோஷிய அணிக்கு எதிராக தோற்றதும் அர்ஜென்டினா ‘டிவி’ சானல் ‘டி.ஒய்.சி’ ஸ்போர்ட்ஸ் பணியாளர்கள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து மவுன அஞ்சலி செலுத்தினர். 

என்ன ஆச்சு 

ஐந்து முறை சிறந்த வீரருக்கான ‘பிபா’ விருது வென்றவர் அர்ஜென்டினாவின் மெஸ்சி. பார்சிலோனா கிளப் அணிக்காக 418 போட்டிகளில் 383 கோல் அடித்த இவரால், தேசிய அணிக்காக 126 போட்டிகளில் 64 கோல் தான் அடிக்க முடிந்தது. 

உலக கோப்பை அரங்கில் தேசிய அணிக்காக விளையாடிய 17 போட்டிகளில் 5 கோல் (2006ல் 1, 2014ல் 4) தான் அடித்தார். 2010, 2018ல் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தவிர 13 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றினார். 

* கடந்த 2014 உலக கோப்பை தொடரில் நைஜீரிய அணிக்கு எதிராக கோல் அடித்த பிறகு, இதுவரை 21 முறை முயற்சி செய்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதேநேரம் லாலிகா தொடரின் இந்த சீசனில் (34 கோல்) சராசரியாக 88 நிமிடத்துக்கு ஒரு கோல் அடித்தார். 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?