Advertisement


கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி

மே 17, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Bangalore, Hyderabad, AB de Villiers
 

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரை முகமது சிராஜ் துல்லியமாக வீச, பெங்களூரு அணி, 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் வில்லியம்சன், மணிஷ் பாண்டே போராட்டம் வீணானது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த 51வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதரபாத் அணி கேப்டன் வில்லியம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

டிவிலியர்ஸ் விளாசல்: கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல் (1) ஏமாற்றினார். கேப்டன் விராத் கோஹ்லி (12) நிலைக்கவில்லை. சாகிப் அல் ஹசன், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் பந்தில் தலா 2 பவுண்டரி விளாசிய டிவிலியர்ஸ், அரைசதம் கடந்தார். பசில் தம்பி வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட மொயீன் அலி, பசில் தம்பி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 25 பந்தில் அரைசதமடித்தார். ரஷித் கான் ‘சுழலில்’ டிவிலியர்ஸ் (69), மொயீன் அலி (65) அவுட்டாகினர். மன்தீப் சிங் (4) ஏமாற்றினார். கிராண்ட்ஹோம் (40) ஓரளவு கைகொடுத்தார்.

பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு,218 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் (22), டிம் சவுத்தீ (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், 3 விக்கெட் கைப்பற்றினார்.

வில்லியம்சன் நம்பிக்கை: கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் (18) சுமாரான துவக்கம் தந்தார். உமேஷ் யாதவ் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய அலெக்ஸ் ஹேல்ஸ் (37), மொயீன் அலி ‘சுழலில்’ சிக்கினார். சவுத்தீ வீசிய 9வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கேப்டன் வில்லியம்சன், மொயீன் அலி வீசிய 10வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய இவர், சிராஜ் வீசிய 12வது ஓவரில், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 28 பந்தில் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மணிஷ் பாண்டே, கிராண்ட்ஹோம் வீசிய 15வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, 22 ரன் கிடைத்தது. முகமது சிராஜ் வீசிய 18வது ஓவரில், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மணிஷ் பாண்டே, சவுத்தீ பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் (81) அவுட்டானார். கடைசி 5 பந்தில், 5 ரன் மட்டுமே கிடைத்தது. ஐதராபாத் அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 204 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மணிஷ் பாண்டே (62), தீபக் ஹூடா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன்மூலம் 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி, 12 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

218 ரன்கள்

ஐதராபாத் அணிக்கு எதிராக 218 ரன்கள் குவித்த பெங்களூரு அணி, ஐ.பி.எல்., அரங்கில் 15வது முறையாக, ஒரு இன்னிங்சில் 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சென்னை அணி, 16 முறை இந்த இலக்கை எட்டியுள்ளது.

* ஐதராபாத் அணிக்கு எதிராக 3வது முறையாக (227/4, 218/6, 200/7), 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் குவித்தது பெங்களூரு.

70 ரன்

ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பசில் தம்பி, 4 ஓவரில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், 70 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் வழங்கிய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2013ல் சென்னைக்கு எதிராக ஐதராபாத் அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மா, 4 ஓவரில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், 66 ரன் வழங்கியிருந்தது அதிகபட்சமாக இருந்தது.

600 ரன்கள்

அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், இந்த சீசனில் 600 ரன்கள் எடுத்த 2வது வீரரானார். இதுவரை இவர், 13 போட்டியில், 8 அரைசதம் உட்பட 625 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், 13 போட்டியில், 6 அரைசதம் உட்பட, 652 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?