ஜெய்ப்பூர்: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 10 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 6வது லீக் போட்டியில், டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. டில்லி அணியில் அமித் மிஸ்ரா, கிறிஸ்டியன் நீக்கப்பட்டு மேக்ஸ்வெல், நதீம் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சாம்சன் விளாசல்
ராஜஸ்தான் அணிக்கு ஷார்ட் (6), ‘ரன்–அவுட்டாகி’ ஏமாற்றினார். ‘காஸ்ட்லீ’ வீரர் பென் ஸ்டோக்ஸ் (16) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பவுல்ட் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன், நதீம் வீசிய 9வது ஓவரிலும் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் ரகானே, பவுல்ட், ஷமி, திவாதியா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்திருந்தது போது நதீம் ‘சுழலில்’ சாம்சன் (37) போல்டானார்.
மழை குறுக்கீடு
ஷமி வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ரகானே (45), நதீம் பந்தில் அவுட்டானார். மோரிஸ், ஷமி பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய பட்லர் (29) ஓரளவு கைகொடுத்தார். ராஜஸ்தான் அணி, 17.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 153 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ராகுல் திரிபாதி (15), கவுதம் (2) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் நதீம் 2 விக்கெட் கைப்பற்றினார்.
6 ஓவர் போட்டி
மழை நின்ற பின், 6 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டில்லியின் வெற்றிக்கு, 71 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. முன்ரோ (0) ‘ரன்–அவுட்’ ஆனார். மேக்ஸ்வெல் (17), ரிஷாப் பன்ட் (20) நிலைக்கவில்லை. விஜய் ஷங்கர் (3) ஏமாற்றினார்.டில்லி அணி, 6 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 60 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மோரிஸ் (17) அவுட்டாகாமல் இருந்தார்.