சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவர் வரை துணிச்சலாக போராடிய சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இரு ஆண்டு தடைக்குப் பின், சென்னை அணி தனது சொந்தமண்ணில் நேற்று களமிறங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தது. கோல்கட்டா அணி வீரர்கள் மைதானம் வர சற்று தாமதம் ஆனது. இதனால், 13 நிமிடம் தாமதமாக ‘டாஸ்’ போடப்பட்டது. இதில் வென்ற சென்னை கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் கேதர் ஜாதவ், மார்க் உட்டுக்குப் பதில், ஷர்துல் தாகூர், சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டனர்.
‘சிக்சர்’ மழை
கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் (22), சுனில் நரைன் (12) ஜோடி, சுமாரான துவக்கம் தந்தது. ராணா (16), உத்தப்பா (29), ரின்கு சிங் (2) நீடிக்கவில்லை. சிக்சர் மழை பொழிந்த ஆன்ட்ரூ ரசல், 26வது பந்தில் அரைசதம் எட்டினார். தினேஷ் கார்த்திக் (26) அவுட்டான போதும், மீண்டும் தோனி, பிராவோவுக்கு ஓவர் தந்து, தவறு செய்தார். இம்முறை, ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி அசத்தினார் ரசல்.
கோல்கட்டா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 36 பந்துகளில் 88 ரன்கள் (11 சிக்சர், 1 பவுண்டரி) எடுத்த ரசல், குர்ரான் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்
கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு வாட்சன், அம்பதி ராயுடு ஜோடி, ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, சென்னை அணி, 3.4 ஓவரில் 52 ரன்களை கடந்தது. பின், 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த வாட்சன், ராயுடு (39) சீரான இடைவெளியில் திரும்பினர்.
பில்லிங்ஸ் போராட்டம்
தோனி, ரெய்னா இணைந்தனர். இந்த ஜோடி ஒவ்வொரு ரன்னாக எடுக்க, ‘ரன் ரேட்’ எகிறியது. இந்த நெருக்கடியில் ரெய்னா (14) அவுட்டானார். 11 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது சென்னை அணி. குல்தீப் ஓவரில், அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார் தோனி. இவருடன் இணைந்த சாம் பில்லிங்ஸ், 2 சிக்சர் அடித்த போதும், கடைசி 24 பந்துகளில் சென்னை அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் தோனி (25) அவுட்டாக, ‘டென்ஷன்’ அதிகரித்தது. தனி நபராக போராடிய பில்லிங்ஸ், ரசல் ஏற்கனவே கொடுத்த அடிக்கு திருப்பி கொடுத்தார். 21வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 56 ரன்னுக்கு (23 பந்து) அவுட்டாக, சென்னை ரசிகர்கள் ‘ஷாக்’ ஆகினர்.
சபாஷ் ஜடேஜா
வினய் குமார் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்து ‘நோ–பால்’ ஆனது. இதில் பிராவோ அடித்த சிக்சர் உட்பட, 7 ரன்கள் கிடைத்தன. இதனால் 6 பந்தில் 10 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தில் 2 ரன். அடுத்த பந்தில், ஒரு ‘வைடு’ உட்பட 2 ரன். 3, 4வது பந்துகளில் ஜடேஜா, பிராவோ, தலா 1 ரன் எடுத்தனர். அடுத்த பந்தில் ஜடேஜா இமாலய சிக்சர் அடிக்க, சென்னை அணி, 19.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜடேஜா (11), பிராவோ (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
திடீர் நிறுத்தம்
நேற்று கிறிஸ் லின் அவுட்டான போது, காலரியில் இருந்து சிலர், ஷூக்கள், கொடிகளை மைதானத்தில் எறிந்தனர். இது, பவுண்டரி எல்லையில் இருந்த ஜடேஜா அருகில் விழுந்தது. இதை, வெளியில் இருந்த டுபிளசி, லுங்கிடி அப்புறப்படுத்தினர். சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த பிரச்னையால், போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இதுவும் ‘பெஸ்ட்’ தான்
சென்னை அணி, சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக சிறந்த ‘சேஸ்’ (205/6 ரன்) செய்து அசத்தியது. இதற்கு முன், கடந்த 2012ல் பெங்களூரு அணியின் (205/8 ரன்) இலக்கைத் துரத்திய சென்னை அணி (208/5 ரன்) 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
* இந்த இரு போட்டியிலும் கடைசி ஓவரை வீசியது வினய் குமார் தான். இதில், 2012ல் பெங்களூரு பவுலராக இருந்து, 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இம்முறை கோல்கட்டா பவுலராக இருந்து, கடைசி ஓவரில் 19 ரன்கள் வாரி வழங்கினார்.
தோனி ‘3000’
நேற்று 25 ரன்கள் எடுத்த தோனி, ரெய்னாவுக்கு அடுத்து, சென்னை அணிக்காக 3000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார். இதற்கு முன் கோஹ்லி, கெய்ல் (பெங்களூரு), ரோகித் சர்மா (மும்பை), காம்பிர் (கோல்கட்டா) தங்களது அணிக்காக இந்த இலக்கை எட்டினர்.
தோனிக்கு கட்டுப்பாடு
சென்னை அணி கேப்டன் தோனி, சென்னை தனது இரண்டாவது ‘தாய்வீடு’ என்பார். இங்கு வரும் நாட்களில் தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்து கொண்டு, சென்னை நகர சாலைகளில் வலம் வருவதுண்டு. இம்முறை போராட்டம் காரணமாக, தோனி இதுபோல செல்ல வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் விதிகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்களாம்.
5
ஐ.பி.எல்., 11வது சீசனில் நேற்று 5வது லீக் போட்டி நடந்தது. இந்த ஐந்து போட்டியிலும் ‘டாஸ்’ வென்ற அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்தன.
* மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில், ‘பவர் பிளே’ ஓவர்களில், 2 பவுலர்கள் மட்டும் வீசினர். நேற்று கோல்கட்டா அணிக்கு எதிராக தோனி, 5 பவுலர்களை (6 ஓவர்) பயன்படுத்தினார்.
64
முதல் 6 ஓவரில் கோல்கட்டா, 64 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் ‘பவர் பிளே’ ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிக ரன்னாக இது அமைந்தது. இதற்கு முன் 2013ல் 63, 2008ல் 61 ரன்கள் எடுக்கப்பட்டன.
105
பிராவோ வீசிய போட்டியில் 17வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட கோல்கட்டாவின் ஆன்ட்ரூ ரசல், நேராக துாக்கி அடித்தார். 105 மீ., துரம் சென்ற இந்த பந்து, மைதானத்தின் மேற்கூரையில் விழுந்து, வெளியே சென்றது. பின் வேறு பந்தை பயன்படுத்த நேர்ந்தது. இது, 2018 இத்தொடரில் அடிக்கப்பட்ட ‘மெகா’ சிக்சராக அமைந்தது.