டுரின்: ‘‘ யுவன்டஸ் அணிக்கு எதிராக ‘சைக்கிள்’ கிக் மூலம் அடித்த கோல், என் வாழ்க்கையின் சிறந்தது. எதிரணி ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டிய தருணம் மறக்க முடியாதது,’’ என, ரொனால்டோ தெரிவித்தார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ‘நாக் அவுட்’ போட்டிகள் தற்போது நடக்கின்றன. இத்தாலியில் நடந்த காலிறுதி முதல் சுற்றில், கடந்த ஆண்டு பைனலில் மோதிய ரியல் மாட்ரிட், யுவன்டஸ் அணிகள் மோதின. ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 3வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 64 வது நிமிடத்தில், கால்பந்து உலகை வியக்க வைத்தார். தரையில் இருந்து 7.1 அடி அந்தரத்தில் உயர்ந்த இவர், அப்படியே ‘சைக்கிள் கிக்’ மூலம் கோல் அடித்தார்.
இதனை, எதிரணியான யுவன்டஸ் ரசிகர்கள் உட்பட எல்லோரும் பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து ரொனால்டோ கூறியது:
யுவன்டஸ் அணிக்கு எதிராக அடித்த கோல் வியக்கத்தக்கது. தரையில் இருந்து அதிக அளவு உயரத்தில் சென்று அடித்த கோல் என்பதால், இது எனது மனதில் என்றும் நிலைத்து நிற்கும். தவிர, எனது கால்பந்து வரலாற்றில், சிறந்த கோல் இது தான்.
இதுபோன்ற ஒரு கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக எனது மனதில் இருந்தது. கடைசியில் எல்லாம் சிறப்பாக அமைய, இப்படி அடிக்கலாம் என, எனது மனது சொல்ல, சரியான படி ‘பினிஷிங்’ செய்தேன். சிறுவனாக இருக்கும் போது யுவன்டஸ் அணி பிடிக்கும். தற்போது இவர்கள் எழுந்து நின்று எனது கோலை பாராட்டிய தருணம் மறக்க முடியாதது.
இவ்வாறு ரொனால்டோ கூறினார்.