புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். சுவிட்சர்லாந்தின் பெடரர், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ‘நம்பர்–1’ இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதற்கு இவர், மயாமி ஓபனில் 2வது சுற்றோடு வெளியேறியதே காரணம். இதனையடுத்து ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். மயாமி ஓபனில் கோப்பை வென்ற அமெரிக்காவின் ஜான் இஸ்னர், 17வது இடத்தில் இருந்து, 9வது இடத்துக்கு முன்னேறினார். பைனல் வரை சென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 4வது இடத்துக்கு முன்னேறினார்.
ராம்குமார் முன்னேற்றம்: இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், முதன்முறையாக 132வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, 105வது இடத்துக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா (19வது இடம்), திவிஜ் சரண் (43வது இடம்) தலா ஒரு இடம் முன்னேறினர். லியாண்டர் பயஸ், 45வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பெண்கள் இரட்யைடர் பிரவில் இந்தியாவின் சானியா மிர்சா, 23வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.