Advertisement


இந்திய அணி சரித்திர சாதனை: தென் ஆப்ரிக்க மண்ணில் தொடரை வென்றது

பிப்ரவரி 13, 2018.
 Comments  
 


kohli
 

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது இந்திய அணி. ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம், குல்தீப் ‘சுழல்’ ஜாலம் கைகொடுக்க இந்திய அணி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 3–1 என, முன்னிலையில் இருந்தது. நேற்று, ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரோகித் எழுச்சி

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்திருந்த போது ரபாடா ‘வேகத்தில்’ தவான் (34) வெளியேறினார்.பின் இணைந்த ரோகித், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. கடந்த 4 போட்டியில் சொற்ப ரன்னில் அவுட்டான ரோகித், இம்முறை எழுச்சி கண்டார். ரபாடா, நிகிடி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரோகித், டுமினி, ஷாம்சி பந்திலும் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்திருந்த போது, கோஹ்லி (36), ‘ரன்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த ரகானேவும் (8), ‘ரன்–அவுட்’ ஆனார்.

நிகிடி அசத்தல்

ரபாடா வீசிய 34வது ஓவரில், 96 ரன்னில் கண்டம் தப்பிய ரோகித், ஷாம்சி பந்தில் 2 ரன் எடுத்து, தென் ஆப்ரிக்க மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவருக்கு, ஸ்ரேயாஸ் ஐயர் ஒத்துழைப்பு தந்தார். நிகிடி வீசிய 43வது ஓவரில்ரோகித் (115), ஹர்த்திக் பாண்ட்யா (0) அடுத்தடுத்துஅவுட்டாகினர். தொடர்ந்து மிரட்டிய நிகிடி ‘வேகத்தில்’ ஸ்ரேயாஸ் (30), தோனி (13) சரணடைந்தனர். இந்திய அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் (19), குல்தீப் யாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில்அதிகபட்சமாகநிகிடி 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஆம்லா ஆறுதல்

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, கேப்டன் மார்க்ரம் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பும்ரா பந்தை ஆம்லா பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு, புவனேஷ்வர் வீசிய 7வது ஓவரில் மார்க்ரம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். பும்ரா ‘வேகத்தில்’ மார்க்ரம் (32) சிக்கினார். பாண்ட்யாவின் ‘வேகத்தில்’ டுமினி (1), டிவிலியர்ஸ் (6) ஆட்டமிழந்தனர்.

பாண்ட்யா தந்த திருப்பம்

ஆம்லா, மில்லர் இணைந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். சகால் பந்தை மில்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்த நிலையில், மில்லர் (36) வெளியேறினார். இரு முறை கண்டம் தப்பிய ஆம்லா அரை சதம் கடந்தார். இந்த நிலையில், புவனேஷ்வர் பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டார் ஆம்லா. பந்தை பிடித்த பாண்ட்யா, துடிப்பாக ‘த்ரோ’ செய்ய, ஆபத்தான ஆம்லா (71) வெளியேறினார். இந்த திருப்பம் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியது.

கைகொடுத்த குல்தீப்

பெலுக்வாயோ டக்–அவுட்டானார். கடந்த போட்டியில் தொல்லை தந்த கிளாசன், இம்முறையும் நெருக்கடி தந்தார். இந்த நேரத்தில், ‘மணிக்கட்டு மந்திர’ வீரர் குல்தீப்பை அழைத்தார் கோஹ்லி. இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. இவரது பந்துவீச்சில் ரபாடா (3), கிளாசன் (39), ஷாம்சி (0) ஆட்டமிழந்தனர். மார்னே மார்கல் ஒரு ரன்னில் திரும்ப, தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ரோகித் வென்றார். இதன் மூலம், இந்திய அணி 4–1 என தொடரை கைப்பற்றியது. ஆறாவது மற்றும் கடைசி போட்டி வரும் 16ல் செஞ்சூரியனில் நடக்கவுள்ளது.

முதல் முறை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4–1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், 4 முறை (1992–93ல் 2–5, 2006–07 ல் 0–4, 2010–11ல் 2–3, 2013–14ல் 0–2) இங்கு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

* போர்ட் எலிசபெத் மைதானத்திலும் இந்திய அணி ஒரு நாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

7

இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஜோடி, 7 முறையாக ‘ரன்–அவுட்’ மூலம் பிரிக்கப்பட்டது. இதில் கோஹ்லி 5, ரோகித் 2 முறை ‘ரன்–அவுட்’ ஆகினர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிகமுறை ‘ரன்–அவுட்’ மூலம் பிரிந்த இந்திய ஜோடிகள் வரிசையில், 2வது இடத்தை டிராவிட்– கங்குலி (7 முறை) ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் கங்குலி – சச்சின் (9 முறை) ஜோடி உள்ளது.

13

இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த ஜோடி, 13வது முறையாக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது. இதன்மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில், அதிக முறை 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த இந்திய ஜோடிகள் வரிசையில், 2வது இடத்தை சச்சின் – சேவக் (13 முறை) ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் சச்சின் – கங்குலி (26 முறை) ஜோடி உள்ளது.

17

பொறுப்பாக ஆடிய இந்தியாவின் ரோகித் சர்மா (115 ரன்), ஒருநாள் போட்டி அரங்கில் தனது 17 வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறார். முதல் மூன்று இடங்களில் முறையே சச்சின் (49 சதம்), விராத் கோஹ்லி (34), கங்குலி (22) உள்ளனர்.

15

துவக்க வீரராக ரோகித் சர்மா, 15வது முறையாக சதமடித்தார். இதன்மூலம் அதிக சதமடித்த இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் சேவக்கை (14 சதம்) முந்தி, 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் முறையே சச்சின் (45 சதம்), கங்குலி (19) உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?