Advertisement


முனை மழுங்கிய ‘சுழல்’ ஆயுதம்: இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது ஏன்

பிப்ரவரி 11, 2018.
 Comments  
 


kohli, chahal
 

ஜோகனஸ்பர்க்: நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றி நழுவியதற்கு மழை குறுக்கீடு மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடு முக்கிய காரணமாக அமைந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 3–1 என, முன்னிலையில் உள்ளது. ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில், ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவான் (109), கேப்டன் கோஹ்லி (75) கைகொடுக்க, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது.

கிலாசன் விளாசல்

பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு, 43 ரன் எடுத்திருந்த போது மின்னல் மற்றும் மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 28 ஓவரில், 202 ரன்கள் என, இலக்கு மாற்றப்பட்டது. ஆம்லா (33), டிவிலியர்ஸ் (26) நம்பிக்கை அளித்தனர். இந்திய பந்துவீச்சை வெளுத்துவாங்கிய டேவிட் மில்லர் (39 ரன், 28 பந்து), ஹெயின்ரிச் கிலாசன் (43* ரன், 27 பந்து), பெலுக்வாயோ (23* ரன், 5 பந்து) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி, 25.3 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்து வென்றது.

தோனி மந்தம்

இந்திய அணியின் தோல்விக்கு மின்னல் மற்றும் மழை முதல் காரணம். இந்திய அணி, 34.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இதனால் 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மின்னல் காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மீண்டும் போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் தவான் (109) அவுட்டானார். அடுத்து வந்த ரகானே (8), ஸ்ரேயாஸ் ஐயர் (18), ஹர்திக் பாண்ட்யா (9),  சொற்ப ரன்னில் வெளியேற. கடைசி கட்டத்தில் தோனி(42 ரன், 43 பந்து) மந்தமாக ஆட, இந்திய அணியால் 289 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதேபோல, தென் ஆப்ரிக்க அணி 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 43 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மின்னல், மழை குறுக்கிட ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின், ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், ‘சுழல்’ வீரர்களான குல்தீப் யாதவ், சகால், தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

சகால் சொதப்பல்

சகாலின் நிலை தான் பரிதாபம். இவர் வீசிய 18 வது ஓவரின் 3வது பந்தில் டேவிட் மில்லர் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. பின், அதே ஓவரின் 6வது பந்தை இவர், ‘நோ–பாலாக’ வீசியதால், 7 ரன்னில் கண்டம் தப்பிய மில்லர், 39 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். மொத்தம் 5.3 ஓவர் வீசிய சகால், ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி, 68 ரன் வழங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ், 6 ஓவரில், 2 விக்கெட் வீழ்த்தி, 51 ரன்கள் வழங்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து, 11.3 ஓவரில், 3 விக்கெட் வீழ்த்தி, 119 ரன் வழங்கினர். இந்திய அணியின் ‘பீல்டிங்’ சிறப்பாக இல்லை. அடுத்த இரு போட்டிகளில் நம்மவர்கள் சுதாரித்துக் கொண்டால், தொடரை கைப்பற்றி சாதனை படைக்கலாம்.

மீண்டு வருவர்

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கூறுகையில், ‘‘ மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறிப்போனது. சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை நன்கு பிடித்து ‘பவுலிங்’ செய்ய முடியவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் சகால், குல்தீப் எழுச்சி காண்பர் என, நம்புகிறேன். எனது நுாறாவது போட்டியில் சதமடித்தது மகிழ்ச்சி,’’ என்றார்.

வீணான வாய்ப்பு

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், ‘‘பொதுவாக, எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் ஒவ்வொரு அணிக்கும் வெற்றி பெற சில வாய்ப்புகள் கிடைக்கும். இதனை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போட்டியில், எங்களுக்கு கிடைத்த ‘கேட்ச்’ வாய்ப்புகளை கோட்டைவிட்டோம். இதனால் வெற்றியை நழுவவிட்டோம். தவிர, நன்றாக சென்று கொண்டிருந்த இப்போட்டி மழையால், ‘டுவென்டி–20’ போல மாறிவிட்டது,’’ என்றார்.

கோஹ்லி தவறான வியூகம்

தென் ஆப்ரிக்க வீரர் கிலாசன் கூறுகையில், ‘‘இந்திய கேப்டன் கோஹ்லியின் ‘பவுலிங்’ வியூகம் வியப்பளித்தது. டேவிட் மில்லரும், நானும் ‘பேட்டிங்’ செய்து கொண்டிருந்த போது, சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர், பும்ராவுக்கு வாய்ப்பு வழங்காமல், குல்தீப், சகால் என, சுழற்பந்துவீச்சாளர்களை ‘பவுலிங்’ செய்ய வைத்தார். இந்த வெற்றி அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக அமையும் என, எதிர்பார்க்கிறேன்,’’ என்றார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேப்டன் மார்க்ரமுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த 12 மாதங்களுக்குள்,  தென் ஆப்ரிக்க அணி, மீண்டும் தாமதமாக பந்துவீசினால், கேப்டனுக்கு தடை விதிக்கப்படும்.

‘பிங்க்’ போட்டி நிதி 

மார்பக புற்றுநோயால் (‘கேன்சர்’) பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், நான்காவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க அணியினர் ‘பிங்க்’ நிற ‘ஜெர்சி’ அணிந்து விளையாடினர். இப்போட்டியில் வீரர்கள் அடிக்கும் பவுண்டரி, சிக்சர் மற்றும் ‘கேட்ச்’ போன்றவற்றுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிதி வழங்கின. இதன் மூலம் கிடைத்த ரூ. 90 லட்சம், ‘கேன்சர்’ நல நிதிக்கு வழங்கப்பட்டது.

* தென் ஆப்ரிக்க அணியினர் ‘பிங்க்’ நிற ‘ஜெர்சி’ அணிந்து இதுவரை விளையாடிய 6 ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?