Advertisement


இந்திய அணிக்கு முதல் தோல்வி: தவானின் சாதனை சதம் வீண்

பிப்ரவரி 10, 2018.
 Comments [2]  
 


India, South Africa, Fourth One Day International Cricket, Dhawan
 

ஜோகனஸ்பர்க்: மழையால் பாதிக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி தோல்வியடைந்தது. அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷிகர் தவான், 100வது போட்டியில் சதமடித்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3–0 என, முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி (பிப். 10) ஜோகனஸ்பர்க் நகரில் நடந்தது.

ஸ்ரேயாஸ் வாய்ப்பு: இந்திய அணியில், ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணியில் ஜோன்டோ, இம்ரான் தாகிருக்கு பதிலாக டிவிலியர்ஸ், மார்னே மார்கல் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

கோஹ்லி அரைசதம்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 20 ரன் சேர்த்த போது ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் (5) வெளியேறி ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் கோஹ்லி, ஷிகர் தவான் ஜோடி அசத்தியது. ரபாடா வீசிய 8 வது ஓவரில், 2 பவுண்டரி அடித்த கோஹ்லி, மார்கல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதமடித்தார். தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய தவான், கிறிஸ் மோரிஸ் வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார்.  மோரிஸ் பந்தில் கோஹ்லி (75) அவுட்டானார்.

தவான் அபாரம்: ரபாடா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான், மோரிஸ் பந்தை பவுண்டரிக்க விரட்டி, 100வது போட்டியில் சதமடித்தார். இந்திய அணி, 34.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 200 ரன்கள் எடுத்திருந்த போது, மின்னல் காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின், மீண்டும் போட்டி துவங்கியதும், மார்கல் ‘வேகத்தில்’ தவான் (109) ‘பெவிலியன்’ திரும்பினார்.

அடுத்து வந்த ரகானே (8), ஸ்ரேயாஸ் ஐயர் (18), ஹர்திக் பாண்ட்யா (9) சோபிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் (5), ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய தோனி, ஓரளவு கைகொடுத்தார். இந்திய அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 289 ரன்கள் எடுத்தது. தோனி (42), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, நிகிடி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

28 ஓவர் போட்டி: பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (22) நல்ல துவக்கம் தந்தார். தென் ஆப்ரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு, 43 ரன் எடுத்திருந்த போது, மீண்டும் மின்னல் மற்றும் மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு, 28 ஓவரில், 202 ரன்கள் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

‘சைனாமேன்’ குல்தீப் ‘சுழலில்’ டுமினி (10) சிக்கினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஆம்லா (33), குல்தீப் பந்தில் வெளியேறினார். சகால் வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய டிவிலியர்ஸ் (26), ஹர்திக் பாண்ட்யாவிடம் சரணடைந்தார். சகால் வீசிய ‘நோ–பாலில்’ கண்டம் தப்பிய டேவிட் மில்லர், பாண்ட்யா வீசிய 19வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கிலாசன், சகால் வீசிய 22வது ஓவரில், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது சகால் ‘சுழலில்’ மில்லர் (39) சிக்கினார். பின் இணைந்த கிலாசன், பெலுக்வாயோ ஜோடி அபாரமாக ஆடியது. சகால் வீசிய 26வது ஓவரில் 2 சிக்சர் அடித்த பெலுக்வாயோ வெற்றியை உறுதி செய்தார்.

தென் ஆப்ரிக்க அணி, 25.3 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. கிலாசன் (43), பெலுக்வாயோ (23) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி, 3–1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத் நகரில் வரும் 13ல் நடக்கவுள்ளது.

எல்லாம் ‘பிங்க்’ மயம்

மார்பக புற்றுநோயால் (‘கேன்சர்’) பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், இப்போட்டி நடந்தது. இதில், தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் ‘பிங்க்’ நிற உடை அணிந்து விளையாடினர். பெரும்பாலான ரசிகர்களும் ‘பிங்க்’ நிறத்தில் உடையணிந்திருந்தனர். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘மெகா ஸ்கிரீன்’ மற்றும் பவுண்டரி எல்லையில் இருந்த விளம்பர போர்டுகள் என அனைத்தும் ஒரே ‘பிங்க்’ மயமாக காட்சியளித்தன.

8வது முறை

இந்தியாவின் ஷிகர் தவான், விராத் கோஹ்லி ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி, இப்படி, 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது 8 வது முறை. இதன்மூலம், 2வது விக்கெட்டுக்கு அதிகமுறை, 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில், 3வது இடத்தை இந்தியாவின் கங்குலி–டிராவிட் (8 முறை) ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடங்களில் இலங்கையின் தில்ஷன்–சங்ககரா (19 முறை), ஆஸ்திரேலியாவின் ஹைடன்–பாண்டிங் (10) ஜோடிகள் உள்ளன.

9வது வீரர்

தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான், 104 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 100வது போட்டியில் சதமடித்த முதல் இந்தியரானார். சர்வதேச அளவில் 9வது வீரரானார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ் (102*, எதிர்: பாக்., 1988), நியூசிலாந்தின் கெய்ன்ஸ் (115, எதிர்: இந்தியா, 1999),  பாகிஸ்தானின் யூசுப் யுகானா (129, எதிர்: இலங்கை, 2002), இலங்கையின் சங்ககரா (101, எதிர்: ஆஸி., 2004), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (132*, எதிர்: இங்கிலாந்து, 2004), இங்கிலாந்தின் டிரஸ்கோத்திக் (100*, எதிர்: வங்கதேசம், 2005), வெஸ்ட் இண்டீசின் சர்வான் (115*, எதிர்: இந்தியா, 2006), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (124, எதிர்: இந்தியா, 2017) ஆகியோர், தங்களது 100வது போட்டியில் சதமடித்திருந்தனர்.

அசாரை முந்திய கோஹ்லி

 கோஹ்லி, 31வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டி அரங்கில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் அசாரை (9378 ரன்) முந்தி, 5வது இடம் பிடித்தார். இதுவரை, 206 போட்டியில், 34 சதம், 46 அரைசதம் உட்பட 9423 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (18,426 ரன்) உள்ளார்.

தொடரும் ராசி

தென் ஆப்ரிக்க அணிக்கு ‘பிங்க்’ நிற ராசி தொடர்கிறது. ‘பிங்க்’ நிற ஜெர்சி அணிந்து இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?