Advertisement


இத்தாலி அணிக்கு ‘இடி’ *இழந்தது உலக கோப்பை வாய்ப்பை

நவம்பர் 14, 2017.
 Comments  
 


miss out on a World Cup italy
 

 மிலன்: உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை, நான்கு முறை சாம்பியனான இத்தாலி அணி பரிதாபமாக இழந்தது. இந்த சோகத்தில் கோல்கீப்பர் புபான் ஓய்வை அறிவித்தார். 

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ( ஜூன் 14–ஜூலை 15) உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மற்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகின்றன. 

ஐரோப்பிய அணிகளுக்கான இரண்டாவது தகுதிச்சுற்றுப்போட்டியில் சுவிட்சர்லாந்து, குரோஷியா, இத்தாலி உள்ளிட்ட 8 அணிகள் மோதின. இதில் சொந்த மற்றும் அன்னிய மண் என்ற அடிப்படையில் அணிகள் பங்கேற்றன. ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் சுற்றுப்போட்டியில் இத்தாலி 0–1 என சுவீடனிடம் வீழ்ந்தது. 

இக்கட்டான நிலை:

மிலனில் நடந்த இரண்டாவது போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, உலக கோப்பையில் இடம் பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இத்தாலி களமிறங்கியது. நான்கு முறை சாம்பியன் பட்டம் (1934,38, 82, 2006) வென்ற அணி என்பதால், உள்ளூர் ரசிகர்களும் சான் சிரோ மைதானத்தை நோக்கி படை எடுத்தனர். மொத்தம் 76 ஆயிரம் ரசிகர்கள் குவிந்ததால், எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கத்திணறினர். முரட்டு ஆட்டத்தில் இறங்கியதால் இத்தாலி சார்பில் 4, சுவீடன் சார்பில் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர். கடைசி வரை இரு அணியினரின் கோல் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில், போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. 

60 ஆண்டுக்குப்பின்...

இதனால், சுவீடன் அணி முதல் போட்டியில் வென்றதன் (1–0) அடிப்படையில் பிரதான சுற்றுக்குள் நுழைந்தது. இத்தாலி அணி 60 ஆண்டுக்குப்பின் உலக கோப்பைக்கு முன்னேற முடியாத அதிர்ச்சியில் ரசிகர்கள் உறைந்தனர். கடைசியாக, 1958ல் சுவீடனில் நடந்த உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் இருந்தது. ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில், மூன்றாவது முறையாக (1930, 1958, 2018) இத்தாலி வீரர்களின் பங்களிப்பை ரசிகர்களால் காண முடியாமல் போனது. 


ரசிகர்களிடம் மன்னிப்பு

இத்தாலி அணியின் அனுபவ கோல்கீப்பர் புபான், 39, உலக கோப்பையில் விளையாட முடியாத ஏமாற்றத்தில், சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். தேசிய அணிக்காக கடந்த 20 ஆண்டாக (175 போட்டி ) விளையாடி வந்த இவர், கண்ணீர்மல்க ஓய்வு பெற்றார். தொடர்ந்து 6 உலக கோப்பையில் (1998, 2002, 06, 10, 14) களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனையை எட்ட தவறினார். 

இது குறித்து புபான் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடருக்கு முன்னேற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போட்டி எனக்கு கடைசியாக அமைந்தது வருத்தமாக உள்ளது. தோல்விக்கு பயிற்சியாளர் கியான் பியரோவை மட்டும் குறை சொல்லக்கூடாது. வீரர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இத்தாலி அணி சரிவிலிருந்து விரைவில் மீண்டு வரும். சிறப்பான எதிர்காலம் அணிக்கு காத்திருக்கிறது,’’ என்றார்.

டேனியல் டி ரோசி, ஆன்ட்ரியா பர்சாக்ளி, சிலானி ஆகிய இத்தாலி  வீரர்களும் ஓய்வு பெற்றனர். 

 

என்ன காரணம்

இத்தாலி அணியின் தலைமை பயிற்சியாளராக கியான் பியரோ வென்ச்சுரா நியமிக்கப்பட்டது தான் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இவர் தனக்கு வேண்டிய முன்கள வீரர்களான சிரோ, ஆன்ட்ரியா பெலோட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் திறமைவாய்ந்த லோரன்சோ இன்சைனி, ஸ்டீபன் எல் ஷாரராவி போன்றோர் ‘பெஞ்ச்சில்’ உட்கார வைக்கப்பட்டனர். சீனியர் வீரர்களான புபான் (39 வயது), சிலானி (33), ஆன்ட்ரியா பர்சாக்ளியை அதிகம் சார்ந்திருந்தார். இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக கைகொடுக்க தவறியபோதும், இளம் வீரர்களை களமிறக்க முயற்சி எடுக்கவில்லை. இதன் காரணமாக இத்தாலி உலக கோப்பை வாய்ப்பை இழக்க நேரிட்டது. 

வென்ச்சுரா கூறுகையில்,‘‘ தோல்விக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டிற்கும் மதிப்பு அளிக்கிறேன்,’’என்றார். 

 

இன்னும் 3 அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். இதுவரை ஆசியா (4), ஆப்ரிக்கா (5), வடக்கு மத்திய அமெரிக்கா, கரீபிய அமைப்பு (3), தென் அமெரிக்கா (4), மற்றும் ஐரோப்பா (12+ 1, தொடரை நடத்தும் ரஷ்யா உட்பட) என, பல பகுதிகளில் இருந்து 29 அணிகள் தேர்வாகியுள்ளன. 

மீதமுள்ள 3 இடங்களுக்கு ஆஸ்திரேலியா–ஹோண்டுராஸ், நியூசிலாந்து–பெரு, டென்மார்க்–அயர்லாந்து குடியரசு அணிகள் போட்டியிடுகின்றன. இதன் இறுதி முடிவு இன்று தெரியவரும்.

இதுவரை தேர்வான அணிகள்:

* ஆசியா

ஈரான், ஜப்பான், தென் கொரியா, சவூதி அரேபியா

* ஆப்ரிக்கா

நைஜீரியா, எகிப்து, செனகல், மொராக்கோ, டுனிசியா

* வடக்கு மத்திய அமெரிக்கா, கரீபிய அமைப்பு (‘கன்காகப்’)

மெக்சிகோ, கோஸ்டாரிகா, பனாமா

* தென் அமெரிக்கா

பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா

* ஐரோப்பா

ரஷ்யா, பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போலந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், செர்பியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, குரோஷியா, சுவீடன்

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?