Advertisement


‘கெத்து’ காட்டிய அமித்! *பாரா தடகளத்தில் வெள்ளி

ஜூலை 17, 2017.
 Comments  
 


Amit Kumar wins silver in World Para Athletics Championships
 

லண்டன்: உலக பாரா தடகளத்தில், இந்திய வீரர் அமித் குமார், ‘கிளப் த்ரோ’ போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8வது உலக ‘பாரா’ தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. மொத்தம் 92 நாடுகளில் இருந்து, 1074 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் ஈட்டி எறிதல் போட்டியில் (எப் 46 பிரிவு) இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார், தங்கம் வென்றிருந்தார்.

நேற்று நடந்த ‘கிளப் த்ரோ’ (எப் 51 பிரிவு) போட்டியில் இந்தியா சார்பில் அமித் குமார் சரோகா, 32, தரம்பிர் தவிர, மொத்தம் 11 பேர் பங்கேற்றனர்.

இதன் முதல் இரு வாய்ப்பில் 29.55, 28.21 மீ., துாரம் ‘கிளப்’ எறிந்த அமித் குமார், அடுத்து 30.25 மீ., துாரம் எறிந்தார். மீதமுள்ள மூன்று வாய்ப்பில், எறிந்த போதும், முதலிடத்துக்கு முன்னேற முடியவில்லை. இதையடுத்து, இரண்டாவது இடம் பிடித்த அமித் குமார், வெ ள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

இதற்கு முன்...:

இதற்கு முன் 2014 ஆசிய பாரா விளையாட்டில் இப்போட்டியில் தங்கம் வென்ற அமித் குமார், கடந்த 2015 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் (தோகா) வெள்ளி வென்றிருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த ரியோ  ஒலிம்பிக்கில் 26.63 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், நான்காவது இடம் பிடித்து, பதக்க வாய்ப்பை இழந்தார். இம்முறை சிறப்பாக செயல்பட்டு, அசத்தினார். இன்று வட்டு எறிதல் போட்டியில் (எப் 51 பிரிவு) களமிறங்கும் இவர், பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரம்பிர் ஏமாற்றம்:

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, செர்பிய வீரர் டிமிட்ரிஜெவிக், இப்போட்டியில் 31.99 மீ., துாரம் எறிந்து, உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார். மற்றொரு செர்பிய வீரர் மிலோஸ மிடிக், 29.06 மீ., துாரம் எறிந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்திய வீரர் தரம்பிருக்கு (22.34 மீ.,) 10வது இடம் தான் கிடைத்தது.

18வது இடம்:

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், இந்தியா 1 தங்கம், 1 வெ ள்ளி என, 2 பதக்கங்கள் வென்று, பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது.

 

‘கிளப் த்ரோ’ தெரியுமா

சிறிய அளவில் மரத்தினால் ஆன, கட்டையை வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு, எறிவது தான் ‘கிளப் த்ரோ’. இடுப்புக்கு கீழே முற்றிலும் பாதிக்கப்பட்ட நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பர்.


துவக்கத்தில் ஹாக்கி

அமித் குமார் சரோகா, 32, அரியானாவைச் சேர்ந்தவர். ஹாக்கி வீரராக வாழ்க்கையை துவக்கியவர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

22 வயதில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட, பக்கவாதத்தில் சிக்கினார். பின் பாரா நட்சத்திரங்களை சந்தித்து, ‘கிளப் த்ரோ’ போட்டியில் களமிறங்கினார்.

இதற்காக இடுப்புக்கு மேல் பகுதியை வலுவாக்க, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். 2010ல் முதன் முதலில் ஆசிய பாரா விளையாட்டில் பங்கேற்று வட்டு எறிதலில் வெ ள்ளி வென்றார்.

2012ல் மலேசியாவில் நடந்த தகுதி போட்டியில் தங்கம் கைப்பற்ற, லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். தவிர, பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியர் ஆனார்.


நழுவிய வாய்ப்பு

ஆண்களுக்கான வட்டு எறிதல் ‘எப்–42’ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜெய்தீப், 37.53 மீ., துாரம் எறிந்து, 4வது இடம் பிடித்து, பதக்கம் பெறும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

ஆண்களுக்கான வட்டு எறிதல், ‘எப்–44’ பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் பர்தீப், 46.45 மீ., துாரம் எறிந்து 6வது இடம் பிடித்தார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் ‘டி–47’ பிரிவில் இந்தியா சார்பில் ராம்பால் சாகர் பங்கேற்றார். அதிகபட்சமாக 1.80 மீ., உயரம் தாண்டிய இவர், 6வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?