Advertisement


தவித்தது இந்தியா...தப்பியது ஆஸி., * ராஞ்சி டெஸ்ட் 'டிரா'

மார்ச் 20, 2017.
 Comments  
 


india australia test ranchi
 

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்த தவறியதால், வெற்றி வாய்ப்பு நழுவியது.  ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ் அரைசதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி போட்டியை 'டிரா' செய்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451, இந்தியா 603/9 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா (7) அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்மித் ஏமாற்றம்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாின் ரென்ஷா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடினர். ஒன்றரை மணி நேரமாக இவர்களை பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆட்டத்தின் 29வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, 4வது பந்தில் ரென்ஷாவை (15) வெளியேற்றினார். ரவிந்திர ஜடேஜா 'சுழலில்'  ஸ்டீவ் ஸ்மித் (21) போல்டானார்.

சூப்பர் ஜோடி:

பின் இணைந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், ஷான் மார்ஷ், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து, விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தவித்தனர். அஷ்வின் வீசிய 57வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஹேண்ட்ஸ்கோம்ப், உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷான் மார்ஷ், அஷ்வின் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். சுமார் 62 ஓவர்கள் இணைந்து விளையாடிய இவர்கள், அணியை தோல்வியின் பிடியிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா பந்தில் ஷான் மார்ஷ் (53) அவுட்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (2), அஷ்வினிடம் சரணடைந்தார்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் முன்னிலை வகித்திருந்த போது, கடைசி நாள் ஆட்டத்தை சற்று முன்னதாக முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. ஹேண்ட்ஸ்கோம்ப் (72), மாத்யூ வேட் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதை இரட்டை சதமடித்து அசத்திய இந்தியாவின் புஜாரா வென்றார்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 25ல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் துவங்குகிறது.


78

ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை தென் ஆப்ரிக்காவின் ஸ்டைனுடன் (2007-08) பகிர்ந்து கொண்டார் இந்தியாவின் அஷ்வின் (2016-17). இருவரும் தலா 78 விக்கெட் வீழ்த்தினர். அடுத்த இடத்தில் இந்தியாவின் ஜடேஜா (2016-17ல் 67 விக்.,) உள்ளார். 


3

இந்திய மண்ணில் 150 ரன்னுக்கும் மேல் பின் தங்கி, டெஸ்ட் போட்டியை 'டிரா' செய்த மூன்றாவது அணி ஆஸ்திரேலியா தான். இதற்கு முன் 2007ல் பாகிஸ்தான் (160 ரன்), 2008ல் இங்கிலாந்து (151 ரன்) அணிகள், இதுபோல கடுமையாக போராடி 'டிரா' செய்தன.

 

தோனி வருகை

மூன்றாவது டெஸ்ட் போட்டி,  முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. நேற்றைய  கடைசி நாள் ஆட்டத்தை நேரில் கண்டு களித்தார். 'மெகா ஸ்கிரீனில்' இவரை காட்டிய போது, 'தோனி..தோனி' என ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.


இஷாந்த் கோபம்

ஆட்டத்தின் 29வது ஓவரின் முதல் பந்தை வீச இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஓடி வந்தார். அப்போது 'பேட்டிங்' செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் ரென்ஷா, 'சைட்-ஸ்கிரீன்' பாதிப்பால், திடீரென விலகினார். இதனால் ஆத்திரமடைந்த இஷாந்த், பந்தை 'ஸ்டெம்சை' நோக்கி எறிந்தார். பின், ரென்ஷா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அம்பயர் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். பின், இந்த ஓவரின் 4வது பந்தில் ரென்ஷாவை எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக்கிய இஷாந்த், ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

 

4

நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்களால் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதில் உணவு இடைவேளைக்கு முன் 2 விக்கெட் வீழ்த்திய நம்மவர்கள், உணவு இடைவேளைக்கு பின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது பின்னடைவாக அமைந்தது. பின், தேநீர் இடைவேளைக்கு பின் 2 விக்கெட் வீழ்த்திய போதும் பயன் இல்லாமல் போனது.

 

373

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 373 பந்துகளை சந்தித்து 124 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இத்தொடரில் அதிக பந்துகளை சந்தித்த ஜோடிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் இந்தியாவின் புஜாரா, சகா ஜோடி (466 பந்து, 199 ரன், 7வது விக்கெட், இடம்: ராஞ்சி) உள்ளது.

 

371

மூன்று போட்டிகளின் முடிவில், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முன்னிலை வகிக்கிறார். இவர், 3 டெஸ்டில் 2 சதம் உட்பட 371 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் புஜாரா (348 ரன், ஒரு சதம், ஒரு அரைசதம்), லோகேஷ் ராகுல் (282 ரன், 4 அரைசதம்) உள்ளனர்.

 

21

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா முன்னிலையில் உள்ளார். இவர், 3 டெஸ்டில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஓகீபே (18 விக்கெட்), இந்தியாவின் அஷ்வின் (17), ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் (14), இந்தியாவின் உமேஷ் யாதவ் (12) ஆகியோர் உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?